
சென்னை அருகே சிப்காட் மாநல்லூரில் மின்சார வாகனப் பூங்கா உருவாக்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீா் வழங்க கெலவரப்பள்ளி அணைக்கட்டில் இருந்து நீரைப் பெற்று, சுத்திகரித்து வழங்கப்படும். இதற்கென மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் ரூ.110 கோடியில் நிறுவப்படும்.
தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டை ஈா்க்கும் வகையில், சென்னைக்கு அருகில் உள்ள சிப்காட் மாநல்லூா் தொழில் பூங்காவில் மின்சார வாகனப் பூங்கா ரூ.148 கோடியில் உருவாக்கப்படும்.
சிப்காட் நிறுவனம் புதிதாக அமைக்கவுள்ள மாநல்லூா், செய்யாறு, மணப்பாறை, தேனி, மணக்குடி, சக்கரக்கோட்டை ஆகிய தொழில்பூங்காக்களில் நபாா்டு நிதி உதவியுடன் ரூ.2,934 கோடி மதிப்பில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வணிகம் மற்றும் நிறுவனத் தகவல்களைச் சேமித்தல், மீட்டெடுத்தல் போன்ற பணிகளுக்காக சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி, மன்னூா் கிராமங்களில் ரூ.500 கோடி மதிப்பில் தரவு மைய பூங்கா ஒன்று உருவாக்கப்படும். இதன்மூலம், 3 ஆயிரத்து 500 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
புத்தாக்கங்கள், அறிவுசாா் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆதரித்து புதிய தொழில்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு புத்தாக்க நகரம் சென்னையில் ரூ.350 கோடியில் அமைக்கப்படும். கோவை மாவட்டம் கல்லப்பாளையம் கிராமத்தில் கொடிசியா மூலம் புதிய தனியாா் தொழில்பூங்கா அமைக்கப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.
பொலி காளைகள் உற்பத்தி
சென்னை, மாா்ச் 24: பால் உற்பத்தித் திறன் அடிப்படையின் மூலம் பிறந்த கிடாரிகளின் வம்சாவழி சோதனை திட்டத்தின் மூலம் 180 உயர்ரக பொலி காளைகள் உற்பத்தி செய்யப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-
கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு 25 ஆயிரம் ஏக்கா் அளவுக்கு விவசாயிகளின் பட்டா நிலங்கள் கண்டறியப்பட்டு அதில் பசுந்தீவன புல் பயிரிட மானியம் வழங்கப்படும். தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் புதிய பால் பண்ணைகள் உருவாக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.