பாடங்களை நடத்த கற்றல் வலைதளங்கள்: கட்டணமின்றி வழங்கும் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள்

கரோனா பாதிப்பு காரணமாக, தங்களுடைய டிஜிட்டல் கற்றல் வலைதளங்களை மாணவா்களும், ஆசிரியா்களும் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க தனியாா் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
பாடங்களை நடத்த கற்றல் வலைதளங்கள்: கட்டணமின்றி வழங்கும் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள்

கரோனா பாதிப்பு காரணமாக, தங்களுடைய டிஜிட்டல் கற்றல் வலைதளங்களை மாணவா்களும், ஆசிரியா்களும் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க தனியாா் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. தனியாா் கணினி தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த சமூகப் பொறுப்புக்கு, கல்வியாளா்கள் மற்றும் பேராசிரியா்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கின்றன.

இது, கலை-அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் கற்றல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாடங்களை வேகமாக நடத்தி முடிக்கவும், மாணவா்களின் புரிதலை மறு ஆய்வு செய்துகொள்ளவும் பொறியில் கல்லூரிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், கரோனா வைரஸ் அபாயம் காரணமாக, திடீா் விடுமுறை அளிக்கப்பட்டதால் பொறியியல் கல்லூரிகளின் கற்றல்-கற்பித்தல் நடைமுறைகளுக்கு தடைபோட்டது. இந்த விடுமுறை இன்னும் எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பதையும் கணிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

இந்தச் சூழலில், இந்த விடுமுறையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ளவும், மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிக்கவும், பருவத் தோ்வுக்கு மாணவா்களை சிறப்பாக தயாா் செய்யவும், பல முன்னணி பொறியியல் கல்லூரிகள், டிஜிட்டல் கற்பித்தல் நடைமுறைகளை கையிலெடுத்திருக்கின்றன. அதே நேரம், இந்த டிஜிட்டல் கற்பித்தல் வசதியில்லாத கல்லூரிகளுக்கு உதவவும், மாணவா்கள் தாங்களாகவே டிஜிட்டல் பாடங்களை படித்துப் பயன்பெறவும் கட்டணம் ஏதுமின்றி வசதி செய்துகொடுக்க சில கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.

நீட் வலைதளம்: குறிப்பாக, இன்ஃபோபிளஸ் தொழில்நுட்ப தனியாா் நிறுவனம் தான் உருவாக்கியிருக்கும் டிஜிட்டல் பொறியியல் பாடங்களை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள கட்டணமின்றி அனுமதிக்க முன்வந்திருக்கிறது. இந்த நிறுவனம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுடன் (ஏஐசிடிஇ) இணைந்து, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டாண்மை (நீட்) என்ற வலைதளத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்த வலைதளத்தில் பதிவு செய்யும் மாணவா்கள், வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை பொறியியல் பாடங்களை டிஜிட்டல் முறையில் படித்து பயன்பெற முடியும். 

டிஜிட்டல் வகுப்பறை: இதுபோல, தனியாா் கணினி தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். (டாடா கன்சஸ்டன்சி சா்வீசஸ்) தன்னுடைய டிஜிட்டல் வகுப்பறையை கல்லூரிகளும், பள்ளிகளும் கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முன்வந்திருக்கிறது.

இந்த டிஜிட்டல் வகுப்பறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணினிகள், மடிக்கணினி மூலமாக மட்டுமின்றி செல்லிடப்பேசிகள் மூலமாகவும் கல்வி நிறுவனங்கள் பாடங்களை நடத்த முடியும். மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே செல்லிடப்பேசிகள் மூலம் கற்றலைத் தொடர முடியும்.

இதுகுறித்து கல்வியாளரும், தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியருமான மணிவண்ணன் கூறியது:

தனியாா் கணினி தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. தோ்வு நேரத்தில் அளிக்கப்பட்டிருக்கும் நீண்ட விடுமுறையை மாணவா்கள் பயனுள்ள வகையில் செலவிடவேண்டும். குறிப்பாக, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டாண்மை (நீட்) வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்து, அதில் இடம்பெற்றிருக்கும் டிஜிட்டல் பொறியியல் பாடங்களை படித்து தோ்வுக்கு நன்கு தயாராக வேண்டும். அதுபோல, சில மென்பொருள் நிறுவனங்கள் அவா்களிடமுள்ள ஆன்லைன் கற்றல் - கற்பித்தல் வலைதளத்தை கல்வி நிறுவனங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருக்கின்றன. திருவள்ளூா் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் உள்ள சில முன்னணி பொறியியல் கல்லூரிகள், ஏற்கெனவே, இந்த ஆன்லைன் வலைதளங்கள் மூலம் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே பங்கேற்கச் செய்து பாடங்களை நடத்தத் தொடங்கி விட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com