நெல்லையில் கடைகள் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடின

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் புதன்கிழமை அதிகாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் புதன்கிழமை வெறிச்சோடி கிடந்த புதிய பேருந்து நிலையம்.
திருநெல்வேலியில் புதன்கிழமை வெறிச்சோடி கிடந்த புதிய பேருந்து நிலையம்.

திருநெல்வேலி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் புதன்கிழமை அதிகாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். அதன்படி புதன்கிழமை முதல் 21 நாள்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாமெனவும், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துகள், பால், காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழக்கம்போல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் ஊரடங்கு காரணமாக 90 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், விளையாட்டு மற்றும் பேன்சி பொருள்கள் விற்பனை கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. நகரம் ரத வீதி, பாளை கடை வீதிகள், மேலப்பாளையம் கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமில்லை. 

கண்டிகைப்பேரி, மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் வழக்கமான விற்பனை நேரம் குறைக்கப்பட்டது. அதனால் காலை 5 முதல் 10 மணி வரை விற்பனை நடைபெற்றது. இதேபோல திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ்சந்திரபோஸ் காய்கனி சந்தை, பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையிலும் காய்கனி கடைகள் மட்டும் செயல்பட்டன.

திருநெல்வேலி ரத வீதியில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்பட்டன. ஆம்புலன்ஸ்கள் வழக்கம்போல இயங்கின. ஆவின் பாலகங்கள், மருந்து விற்பனை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 800 பேருந்துகளும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்வார்கள். ஆனால், ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையம் புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. ஆவின் பாலகம் மட்டும் செயல்பட்டது.

வருங்கால வைப்புநிதி அலுவலகம், ஆயுள் காப்பீட்டுக்கழகம் உள்பட மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்பவும், நேரில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டதால் அலுவலகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. 

திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் கீழ் 3 தலைமை அஞ்சலகங்கள், 92 துணை அஞ்சலகங்கள், 200-க்கும் மேற்பட்ட கிளை அஞ்சலங்கள் உள்ளன. இவற்றில் தலைமை அஞ்சலகங்கள் மட்டுமே இயங்கின. துணை மற்றும் கிளை அஞ்சலங்கள் செயல்படவில்லை. தலைமை அஞ்சலகங்களில் குறைந்த பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தடை பட்டுள்ளதால் அஞ்சல் பட்டாவாடாவில் தாமதம் ஏற்படும் என்று தெரிவித்த பின்பே அஞ்சல்கள் பெறப்பட்டன. வங்கிகள் அனைத்தும் காலை முதல் மதியம் வரை இயங்கின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com