Enable Javscript for better performance
ஊரடங்கு உத்தரவு விஷயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பை 100 சதவீதம் எதிர்பார்க்கிறோம்: திருநெல்வேலி மாநக- Dinamani

சுடச்சுட

  

  பொதுமக்களின் ஒத்துழைப்பை 100 சதவீதம் எதிர்பார்க்கிறோம்: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்

  By DIN  |   Published on : 25th March 2020 09:16 PM  |   அ+அ அ-   |    |  

  tvl1

  கரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாநகர பொதுமக்களிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தெரிவித்தார்.

  இது தொடர்பாக  அவர், மேலும் கூறியதாவது: அத்தியாவசியப்  பொருள்களுக்காக மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். சில தவறாக புரிந்துகொண்டு கடை திறந்திருக்கிறது என்பதற்காக அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். இதனால், ஊடரங்கு உத்தரவுக்கான நோக்கம் சிதைந்துவிடுகிறது. 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கத்தான்.

  திருநெல்வேலியில் கரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதன் மூலம் இங்கும் அந்த வைரஸ் வந்துவிட்டது. 10 பேர் கரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுத்திருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்த 600 பேர் அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

  100 சதவீ ஒத்துழைப்பு தேவை: பொதுமக்கள் சந்தையிலோ,  மளிகைக் கடையிலோ, ஏடிஎம்மிலோ கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் பொதுவெளியில் நடைப் பயிற்சி செல்வதைக்கூட தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வீட்டிலேயே நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சி என்ற பெயரில் 40 பேர் ஒன்றாக சேர்ந்தால் அதனால் எந்த பலனுமில்லை.  

  ஊரடங்கு உத்தரவு விஷயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பை 100 சதவீதம் எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் நலன் கருதி அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையகங்கள் திறந்திருப்பதால், அதைக் காரணமாகக் கூறி பலர் வெளியில் சுற்றுகிறார்கள். ஒருவர் முதலில் 100 கிராம் சர்க்கரை வாங்கச் செல்வதாகக் கூறுகிறார். அதேநபர் 2 மணி நேரம் கழித்து தேயிலை வாங்க செல்வதாகக் கூறுகிறார்.  

  பின்னர் மீண்டும் காய்கறி வாங்க செல்வதாகக் கூறி வெளியில் சுற்றுகிறார். வீட்டை விட்டு வெளியில் வருகிறபோது ஏதாவது ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இதுபோன்று அடிக்கடி வருவதைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருள்களை ஒரே நேரத்தில் வாங்க வேண்டும். முடிந்தவரை 3 நாள்களுக்கு தேவையானவற்றை ஒரே நாளில் வாங்கிச் செல்லலாம். அப்போது மக்கள் கூடுவதை தவிர்க்கலாம். 

  கூட்டுத் தொழுகைக்கு தடை: தச்சநல்லூரில் ஒருவர் டியூசன் எடுப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் சென்று எச்சரித்தனர். ஒரே இடத்தில் 40 பேர் ஒன்று சேர்ந்து படிக்கும்போது அங்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டியூசனுக்கோ, மற்ற இடங்களுக்கோ அனுப்ப வேண்டாம்.  பேட்டை, மேலப்பாளையத்தில் மசூதிக்கு தொழுகைக்காக வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்து தொழுகை நடத்துமாறு அறிவுரை கூறியிருக்கிறோம். இதேபோல், கூட்டுப் பிரார்த்தனை செய்யக்கூடாது. 

  தேநீர் கடைகளுக்கு தடை:  திருநெல்வேலி மாநகரில் புதன்கிழமை மாலை 6 மணி வரை மட்டுமே தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இனி தேநீர் கடைகளை திறக்க அனுமதியில்லை. காய்கறி கடைகள், இறைச்சிக்கடை, சந்தை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையகங்கள் வழக்கம்போல் செயல்படும். மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள் முழுக்க இறைச்சிக் கடைகள் செயல்படுகின்றன. அதனால், அனைவரும்  ஒரே நேரத்தில் இறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

  48 ரோந்து வாகனங்கள்: மேலும் மாநகராட்சி சார்பில் மக்கள் எவ்வளவு இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள். எனவே, அனைவரும்அந்த வட்டத்திற்குள் நின்று பொருள்களை வாங்குவது நல்லது. எல்லாவற்றையும் காவல்துறையோ, வருவாய்த்துறையோ, மாநகராட்சியோ வந்து சொல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கக்கூடாது. தொலைக்காட்சியில், சமூக வலைதளங்களில் அனைத்து விஷயங்களையும் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். எனவே, அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரைப் பொறுத்தவரையில் 48 ரோந்து வாகனங்களும், 730 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai