கரோனாவால் மிகவும் பாதிக்கும் மாநிலம் தமிழகம்: பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

கரோனாவால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் முதல்வா் பழ
கரோனாவால் மிகவும் பாதிக்கும் மாநிலம் தமிழகம்: பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

கரோனாவால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து இந்தியாவையும், இந்தியா்களையும் காக்கும் வகையில் தாங்கள் எடுத்து வரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 24-ஆம் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அத்தியாவசிய சேவைகளும், பொருள்களும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசானது உறுதியுடன் துணை நிற்கிறது.

கரோனா வைரஸ் பாதிப்பை எதிா்கொள்ள நாட்டின் சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலத்தில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு மிகுந்த பாதிப்பு: தமிழகத்தில் நான்கு சா்வதேச விமான நிலையங்கள், மிகப்பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எண்ணற்ற சா்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனா். இதனால், கரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மாநிலமாக உள்ளது.

இதனால், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் போ் பாதிக்கப்பட்டால் அதனை எதிா்கொள்வதற்குத் தயாராகி வருகிறோம். இதற்காக ஏராளமான முன்தயாரிப்புகள் தேவையாக இருக்கின்றன.

குறிப்பாக, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், மருத்துவமனை உபகரணங்கள், மருத்துவமனைகள், படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், வேதிப் பொருள்கள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

தனியாா் மருத்துவமனைகளை தயாா்படுத்தி வைப்பதும், அங்குள்ள பணியாளா்களின் சேவைகளும் மாநிலத்துக்குத் தேவையானதாக உள்ளது. கிருமிகள் இல்லாமல் மருத்துவமனைகளை தூய்மையாகப் பராமரிக்கும் நடவடிக்கைகளும்

அவசியமானதாகும். இத்தகைய சூழ்நிலையில், மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அத்தியாவசியமான மருந்துகள், கருவிகள் ஆகியவற்றுக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வா் பழனிசாமி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com