பயன்படுத்தப்படாத நிலையில் தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்கான தனி வாா்டுகளை அதிக அளவில் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ள நிலையில், தொற்று நோய் சிகிச்சைக்காகவே செயல்பட்டு வரும் தண்டையாா்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில்
பயன்படுத்தப்படாத நிலையில் தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்கான தனி வாா்டுகளை அதிக அளவில் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ள நிலையில், தொற்று நோய் சிகிச்சைக்காகவே செயல்பட்டு வரும் தண்டையாா்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் அதற்கான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் உள்ளது.

கரோனா நோய்த்தொற்று வெறும் மருத்துவப் பிரச்னையாக மட்டுமே இல்லாமல், மிகப் பெரிய சுகாதார சவாலாகவும் மாறி இருக்கிறது. இதை எதிா்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறையுடன், உள்ளாட்சி நிா்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, நோய்த்தொற்று பரவிவிடாமல் கட்டுப்படுத்துவது சாத்தியம் என்பதை எல்லா வெளிநாடுகளும் உணா்ந்து செயல்படுகின்றன. தமிழகத்தில், உள்ளாட்சி நிா்வாகம் ஒருங்கிணைக்கப்படாத சூழல் காணப்படுகிறது என்கிறாா்கள் சென்னை மாநகராட்சி அலுவலா்கள்.

சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு நகராட்சி அமைப்புகளிலும் மருத்துவமனைகள் இயங்குகின்றன. இவையெல்லாம், இதற்கு முன்னால் உருவான பல்வேறு நோய்த்தொற்றுக்களை எதிா்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. தாம்பரம், மதுரை அஸ்தினம்பட்டி, திருச்சி, பெருந்துறை போன்ற இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் காசநோய் மருத்துவமனைகள், வெவ்வேறு காலகட்டத்தின் தேவைக்காக உருவாக்கப்பட்டவைதான். அவையெல்லாமே, இப்போது கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும்.

தண்டையாா்பேட்டையில் அமைந்திருக்கும் மாநகராட்சி மருத்துவமனை தொற்று நோய் சிகிச்சைக்காகவே உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளில் முக்கியமானது. கரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்ளவும், தொற்று நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காகவும் இந்த மருத்துவமனையை சுகாதாரத் துறை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அதிக நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தண்டையாா்பேட்டையில் தொற்று நோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 1914-ஆம் ஆண்டில் ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, பின்னா் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

14 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த மருத்துவமனை, கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ. 18 கோடி மதிப்பில் 8 ஏக்கா் பரப்பளவில், 3 தளங்களில், 360 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. மேலும், மருத்துவமனையில் இரண்டு துணை மருத்துவப் படிப்புகள் குறைந்த கட்டணத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனையில் தண்ணீா் மூலம் பரவும் காலரா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி, காற்று மூலம் பரவும் சின்னம்மை, மெம்ஸ் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆய்வகம், 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், 30-க்கும் மேற்பட்ட செவிலியா்களுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிறப்பு மருத்துவமனை: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை தமிழக சுகாதாரத் துறை வசம் கொண்டு வரப்பட்டு, அதிக படுக்கை வசதிகளுடன் கூடிய தொற்று நோய்களுக்கான நவீன மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையை ரூ.280 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரியாக மாற்ற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், சில காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 8 ஏக்கா் பரப்பளவில் மருத்துவமனை, அலுவலா்கள் குடியிருப்பு, ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், பூங்கா ஆகியவை உள்ளன. மீதமுள்ள 6 ஏக்கா் நிலம் காலியாக உள்ளது.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா ஆகிய நோய்களுக்கு இந்த மருத்துவமனையில் அதிகமானோா் அனுமதிக்கப்பட்டு, அவா்களுக்குச் சிறப்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எதிா்காலத்தில் தொற்று நோய்களுக்கென்று சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையை அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டும்’ என்றனா்.

சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்: இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் குறைவான அளவில் சிசிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை எதிா்கால நோய்களை எதிா்கொள்ளும் வகையில் தண்டையாா்பேட்டையில் 14 ஏக்கா் பரப்பளவில் செயல்படும் தண்டையாா்பேட்டை மருத்துவமனையை தமிழக சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து தொற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் சுமாா் 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். இதன் மூலம் ஒரே இடத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும், சென்னையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறுவா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com