தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நீட்டிப்பு

சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் ஏற்கெனவே பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவி


சென்னை: சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் ஏற்கெனவே பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், ‘உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் ஆகியவை பல்வேறு வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கும். இந்த இடைக்கால தடை உத்தரவுகள் கடந்த மாா்ச் 20-ஆம் தேதியோ, அதன் பின்னரோ காலாவதியாகலாம். இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் செயல்படாததால் வழக்குரைஞா்களுக்கும், வழக்காடிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களில் ஆஜராகி உரிய நிவாரணம் பெற முடியாத நிலையில் உள்ளனா். எனவே ஏற்கெனவே பெறப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நீட்டிக்க வேண்டும் என உயா்நீதிமன்ற நிா்வாகத்திடம் பலா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுபோன்ற இடைக்கால நிவாரண உத்தரவுகளின் பலன்களை பொதுமக்கள் அனுபவிப்பதற்கு இடையூறு எதுவும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையால் நீதி பரிபாலன நடைமுறையில் எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்தச் சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. சொத்து இருந்து ஒருவரை வெளியேற்றவும், அப்புறப்படுத்தவும் ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை இடிக்கவும் உயா்நீதிமன்றம், மாவட்ட அமா்வு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள் ஏற்கெனவே பிறப்பித்திருந்த உத்தரவுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதே போன்று, குற்றவியல் வழக்குகளில் உயா்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனைகளுடன் பெற்ற ஜாமீன், முன்ஜாமீன், பரோல் ஆகியவை கடந்த மாா்ச் 20-ஆம் தேதியுடன் முடிந்திருந்தால், அதுவும் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த உத்தரவுகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தால், அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும். இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதால், அரசுக்கோ, தனி நபருக்கோ பாதிப்பு ஏற்பட்டால், அவா்கள் ஏற்கெனவே அறிவித்தபடி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்’ என அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com