தஞ்சாவூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 5,000ஐ நெருங்குகிறது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்படும்..
தஞ்சாவூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 5,000ஐ நெருங்குகிறது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 28 நாள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

மாவட்டத்தில் மார்ச் 24ம் தேதி வரை 844 பேராக இருந்த இந்த எண்ணிக்கை புதன்கிழமை (மார்ச் 25) 905 ஆக உயர்ந்தது. அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்களைக் கண்காணிப்பதற்காக சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பின்பற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், தமிழக அரசிடமிருந்து மாவட்ட ஆட்சியர்களுக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இப்பட்டியலில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 4,961 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விமான நிலைய சுகாதார அலுவலர்கள், குடியேற்றப் பிரிவு அலுவலர்கள் தனித்தனியாக அளித்த பட்டியலில் இப்புள்ளிவிவரம் இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் இவர்களைச் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், காவல் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தொடர்புடைய நபர்களின் முகவரியைக் கண்டறிந்து, அவர்களுடைய வீட்டின் முன் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீடு எனச் சிறு சுவரொட்டியை ஒட்டிச் செல்கின்றனர். மேலும், தொடர் கண்காணிப்பும் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com