புதுக்கோட்டைக்கு கரோனா பரிசோதனை மையம் தேவை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
புதுக்கோட்டைக்கு கரோனா பரிசோதனை மையம் தேவை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி நகரில் இருந்து 5 கிமீ தொலைவில் முள்ளூர் கிராமத்தில் ரூ. 250 கோடியில் கட்டப்பட்டு 2017இல் திறந்து வைக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் புள்ளிவிவரங்கள் மெல்ல அச்சத்தை உருவாக்காமல் இல்லை. அதாவது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்குத்தான் முதலில் கரோனா தொற்று ஏற்படுவதும், அவர்கள் மூலமாக மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படுவதும் தெரியவருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பிப். 27ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 183 பேர் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி வரை ஊர் திரும்பும் சம்பவங்கள் தொடர்ந்துள்ளன. தற்போது விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அண்மைக்காலமாக ஊர் திரும்புவது நடைபெறவில்லை.

மொத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 557 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

நோய்க்குறிக் காலம் என அறியப்படும் 28 நாட்கள் முடிவடைந்த நபர்களைத் தவிர மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் எனச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் கரோனா சிறப்பு வார்டு நகரிலுள்ள ராணியார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டில் வியாழக்கிழமை இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை இந்தப் பரிசோதனைத் துறை சார்ந்த முதுநிலை மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகள் இல்லாத பிற மருத்துவக் கல்லூரிகளிலும் கூட பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியிலும் ஒரு பரிசோதனை மையம் அமைத்திட இதே மண்ணின் மைந்தரான மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com