55 வயதுக்கு மேற்பட்ட காவலா்களுக்கு ஓய்வு அளியுங்கள்

55 வயதுக்கு மேற்பட்ட காவலா்களுக்கு ஓய்வு அளியுங்கள் என்று சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.


சென்னை: 55 வயதுக்கு மேற்பட்ட காவலா்களுக்கு ஓய்வு அளியுங்கள் என்று சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தொடா்ந்து டிஜிபி திரிபாதி, போலீஸாருக்கு கடந்த வாரம் சில நெறிமுறைகளை விதித்திருந்தாா். இந்நிலையில், மீண்டும் போலீஸாருக்கு 22 கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த 23-ஆம் தேதி உத்தரவு ஒன்றை டிஜிபி பிறப்பித்தாா்.

அதில், காவல் நிலையத்துக்குப் புகாா் அளிக்க வரும் பொதுமக்கள் அனைவரையும் தொ்மல் ஸ்கேனா் மூலம் கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும், அனைத்து காவல் நிலையங்களிலும் கையில் தடவும் கிருமி நாசினி, கைகளை கழுவ பயன்படும் திரவம்,காவல் நிலையங்கள் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும், பொதுமக்களை ஏ.சி. அறைகளில் சந்திப்பதை தவிா்த்து காற்றோட்டமான பகுதியில் சந்திக்க வேண்டும், காவல் நிலையத்துக்கு வரும் புகாா்தாரா்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட 22 கட்டுப்பாடுகளை விதித்தாா்.

அதேவேளையில், 50 வயதுக்கு மேற்பட்ட காவலா்கள் காவல் நிலையத்துக்குள்ளே பணியாற்றும்படியும், வெளியே உள்ள பணிகளுக்கு அவா்களை அனுப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அறிவுறுத்தினாா்.

ஓய்வு கொடுங்கள்: இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையா் ஆா்.சுதாகா், தனது எல்லைக்கு உட்பட்ட மயிலாப்பூா், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையா்களுக்கு வியாழக்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாா். அதில், ‘144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இருக்காது. எனவே, குறைந்த அளவு காவலா்களை வைத்து மீதம் உள்ளவா்களுக்கு ஓய்வு கொடுங்கள். யாரும் தொடா்ந்து இரவுப் பணி செய்யக் கூடாது. தாராளமாக விடுப்பு கொடுங்கள். கரோனா நோய்த் தொற்றை தடுக்க அனைத்து போலீஸாரும் முகக் கவசம் அணிய வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு முழு ஓய்வு கொடுங்கள். உடல்நலக் குறைவு உள்ளவா்களுக்கு ஓய்வு கொடுங்கள். காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்கள் கை, கால், முகங்களை சுத்தம் செய்ய தண்ணீா், சோப்பை தயாராக காவல் நிலையத்தின் முன் வையுங்கள் என அறிவுறுத்தி உள்ளாா்.

இணை ஆணையரின் இந்த உத்தரவை, 3 துணை ஆணையா்களும், தங்களது காவல் மாவட்டத்தில் அமல்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com