ஊரடங்கில் உருப்படியான வேலை: பனையோலை விசிறி தயாரிக்கும் பி.இ. பட்டதாரி!

ஊரடங்கு உத்தரவினை பயன்படுத்தி பனை ஓலையில் விசிறி தயாரிக்கும் சங்ககிரி பி.இ.பட்டதாரி இளைஞர்
ஊரடங்கில் உருப்படியான வேலை: பனையோலை விசிறி தயாரிக்கும் பி.இ. பட்டதாரி!

சேலம் மாவட்டம், சங்ககிரியில்  சுய தொழில் செய்து வரும் பி.இ.பட்டதாரி இளைஞர் ஊரடங்கு உத்தரவையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பனை ஓலைகளில் விசிறிகள் மற்றும் பொருள்களை தயாரித்து வருகின்றார். 

கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மார்ச் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்து காவல்துறை மூலம் கண்காணித்து வருகின்றது. அதனையடுத்து சங்ககிரி அருகே உள்ள ஆர்.எஸ். செங்காளிகாடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் படித்து முடித்து விட்டு சங்ககிரி, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாரிகள், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஆடியோ சிஸ்டம் செய்து கொடுத்து வருகிறார்.

இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், தமிழ் என்ற மகனும் உள்ளனர். இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரது பணிகளை ஒத்தி வைத்து விட்டு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புடன் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், அவைகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதையடுத்து வீட்டில் உள்ள நேரத்தைப் பயனுள்ளதாக வேண்டுமென்று எண்ணிய அவர் அவரது வீட்டருகே உள்ள பனை மரத்தின் இலைகளைக் கொண்டு விசிறிகள்,  விளையாட்டுப் பொருள்களையும்  செய்து வருகிறார். 

மேலும் வேப்பரமத்தின் பூக்களைச் சேகரித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை அறிவித்து அதனைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தினாலும் அதனைச் சிலர் கேட்காமல் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றும் போது காவல்துறையிடம் பிடிபட்டு தண்டனை அனுபவிக்கும் இந்த தருணத்தில் பி.இ.பட்டதாரியின் ஆர்வத்தை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர். 

இது குறித்து கனகராஜ் கூறும் போது:-

நான் லாரிகள், வீடுகள், கடைகளுக்கு ஆடியோ சிஸ்டம் செய்து கொடுத்து வருகிறேன். தற்போது கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

தற்போது 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளதால் எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளன. அதனால் நான் ஏன் ஓய்வு எடுக்க வேண்டுமென்று எண்ணினேன் அதில் எனக்கு உதயமானது தான் பனை ஓலைகளைக் கொண்டு ஏன் பொருள்கள் தயாரிக்கக் கூடாது என்று. அப்போது தான் சிந்தித்தேன் எனது வீட்டருகே கிடைத்த பனை ஓலைகளை வைத்து முதலில் விசிறிகளைச் செய்ய கற்றுக்கொண்டேன்.

தற்போது குழந்தைகளுக்கான மற்ற விளையாட்டுப் பொருள்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதனை வைத்து வருகின்ற மே மாதம் கோடைக் காலத்தில் மின் தடை ஏற்படும் போது இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தயாரித்து வருகின்றேன் என்றார். மேலும் அவர் மற்ற ஓய்வு நேரத்தில் வேப்ப மரத்திலிருந்து கீழே விழுந்துள்ள பூக்களைச் சேகரித்துச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com