தமிழகத்தில் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தமிழகத்தில் 100 கோடி மதிப்பிலான
தமிழகத்தில் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தமிழகத்தில் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பாக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கடம்பூர், கடலையூர், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், இளையரசனேந்தல், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், தர்மபுரி மாவட்டத்தில் காவிரி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் அதைச் சார்ந்த 1,500 சிறிய கம்பெனிகளும் இயங்கி வருகிறது. 

இதில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் தீப்பெட்டி தொழிலில் 90% பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

நாடு முழுவதும் அந்தந்த மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அனுப்பப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் லாரிகளில் ஆங்காங்கே பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. தற்போது வெப்பமான சீதோஷ்ன நிலை துவங்கி உள்ளதாலும் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை செய்ய முடியாமல் லாரிகளில்  இருப்பதாலும் தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நேரிட வாய்ப்புள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். 

வட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை நடைபெறாததால் சுமார் 100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் தீப்பெட்டி மூலப்பொருள்கள் விற்பனையாளர்களுக்கும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15 வரை தொடரும் என்பதால் தீப்பெட்டி தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கவலை தெரிவிக்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.எஸ். சேதுரத்தினம் கூறுகையில் மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகள், முரண்பட்ட வரிவிதிப்புகள், அண்டை மாநிலங்களிலிருந்து தீக்குச்சி மரத்தடிகளைக் கொண்டுவருவதில் உள்ள சட்டச் சிக்கல்கள், தீப்பெட்டி உற்பத்தியில் பன்னாட்டு கம்பெனிகளின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தமிழகத்தில் குடிசைத்தொழிலான தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்பை எதிர் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தீப்பெட்டி உற்பத்தியும் முடங்கி தீப்பெட்டி வர்த்தகமும் 100 கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள 8 லட்சம் தொழிலாளர்களும் பிழைப்பின்றி வருமானமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com