Enable Javscript for better performance
Essential urgent psychological support- Dinamani

சுடச்சுட

  

  அவசிய அவசரத் தேவை உளவியல் ஆதரவு

  By - சா. ஜெயப்பிரகாஷ்  |   Published on : 28th March 2020 11:42 AM  |   அ+அ அ-   |    |  

  psychological

   

  கரோனா நம்மைப் புரட்டிப் போட்டுக்கொண்டே இருக்கிறது. நேரடியாக கரோனா பாதிப்பைத் தாண்டி இதர வகையிலான தொந்தரவுகள் அதிகரித்திருக்கின்றன. அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன.

  அதாவது கரோனா தொற்று ஏற்படலாம் எனச் சந்தேகிக்கப்படும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஊர் திரும்பியவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

  28 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தி வைத்திருக்கும்போது, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டறிக்கையிலுள்ள மருத்துவ உதவி எண்களை அவர் தொடர்பு கொள்ளும்போது- 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அவர்களை அழைத்து வந்து மாவட்ட மையத்திலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கும். அங்கு ரத்தமாதிரி எடுத்து, பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதான் இப்போதுள்ள நடைமுறை. 

  இதன்படி, மாநிலம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களின் குடும்பத்தினர், அவர் சென்று வந்த போக்குவரத்துப் புழக்கத்தில் வருவோர் என இந்தத் தனிமைப்படுத்தும் வீடுகள், நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

  அவர்களின் வீட்டுச் சுவர்களில் எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களின் கைகளில் முத்திரை குத்தப்பட்டுள்ளது. முத்திரையுடன் வீதிகளில் சுற்றுத் திரிந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது.

  இதில் தற்போது எழுந்துள்ள சிக்கல் மிகவும் முக்கியமானது. தனித்திருத்தல் அத்தனை சுலபமானதல்ல. அதுவும் தனக்கு கரோனா வரலாம் என்ற பீதியில் தனித்திருத்தல் மிக மிக அச்சுறுத்தலானதுதான்.

  இந்த மனபீதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் போதிய திட்டம் இல்லை. அவ்வாறு இருந்தாலும் செயல்படுத்துதல் கடினம் என்பது வெளிப்படையான உண்மை. ஏற்கெனவே பல்வேறு பணிகளில் சுமார் 18 மணி நேரத்துக்கும் மேல் சுற்றிச் சுழன்று வரும் அதே அதிகாரிகள்தான் - மாவட்டங்கள் தோறும் உருவாக்கப்பட்டுள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரைக் கண்காணிக்கும் குழுவிலும் உள்ளனர்.

  சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட  வீடுகளில் உள்ளோரைச் சந்திக்கிறார்கள். ஆறுதல் கூறுகிறார்கள். பழக்கூடைகளைத் தருகிறார்கள். ஆனால், அத்தனை ஆயிரம் பேரைச் சந்தித்தல் சாத்தியமும் இல்லை. எனவே, பிரத்யேக முயற்சிகளைத் தொடங்க வேண்டும். காரணம் புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனியில் ஒரு நபர் உடைகளைக் களைந்து வெளிவே ஓடி வந்து மூதாட்டியின் கழுத்தைக் கடித்துக் கொன்றிருக்கிறார். இவை வெளியே வந்த பெரிய சம்பவங்கள். வீடுகளில் சின்னசின்ன குழப்பங்கள், எரிச்சல்கள், கோபங்கள், பாத்திர உடைப்புகள் பலவும் நேர்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மறுப்பதற்கில்லை.

  என்ன செய்யலாம்?

  உடனடியாக அரசு, தனியார் மனநல மருத்துவர்களைக் குழுவாக அமைத்து அந்தந்த மாவட்டங்களில் ஏற்கெனவே பட்டியல் எடுத்துள்ள நபர்களிடம் தொலைபேசியில் தினமும் உரையாடலாம். அவர்கள் கேட்பார்கள், பிறகு நாம் மனநல ஆலோசனை வழங்கலாம் எனக் காத்திருத்தல் பெரும் கேடு தரும்.

  பேச்சிலேயே அவர்களின் மனநலம் குறித்த விவரத்தை மனநல மருத்துவர்களால் கணித்துவிட முடியும். இப்பணியில் எச்ஐவி- எய்ட்ஸ் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஆற்றுப்படுத்துநர்களையும் (கவுன்சிலர்கள்) ஈடுபடுத்தலாம்.

  கொஞ்சம் நெருக்கடி தெரியும் நபர்களை நேரில் சென்றும் கூட பேசலாம். இது அரசு உடனடியாக செய்ய வேண்டிய களப்பணி. கரோனா தொற்றினால் கவலைப்படாதீர்கள், நல்ல மருந்துகள் இருக்கின்றன என்பதை அவர்களுக்குச் சொல்லி நம்பிக்கையூட்ட வேண்டும். இதுவும் முக்கியம். இதைச் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை மாதங்கள் எனக் கொஞ்சமும் தெரியாத நிலையில் ஏராளமானோர் மனநலப் பிறழ்வுக்கு உள்ளாக வேண்டி வரலாம். சிக்கல்களும் அதிகரிக்கலாம்.

  தனிமைப்படுத்தப்பட்டோரும், அவர்களின் குடும்பத்தினரும் நோயாளிகள் அல்லர். வீடுகளில் வழக்கமான உரையாடல்கள், வழக்கமான நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்கெனவே பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே இருங்கள். பொழுதுபோக்காக தாங்கள் கருதும் செயல்களைச் செய்யுங்கள். பிடித்தமான உணவைச் செய்து ருசித்துப் பாருங்கள். அதுகுறித்து சமூக ஊடகங்களில் பகிருங்கள்.

  நண்பர்களே...

  எல்லாவற்றையும் தாண்டி, என்றும் நகைச்சுவை நாயகனாக ஊடகங்களில் வலம் வரும் வடிவேலுவின் மீம்களையும் விட நம்மை மகிழ்வூட்டும் ஒன்று இருக்க முடியுமா என்றும் நம் மனதை இலகுவாக்கும் தன்மை கொண்ட இளையராஜாவின் இசையைக் காட்டிலும் நம்மை மகிழ்வூட்டும் ஒன்று இருக்க முடியுமா? இதுபோல பல அம்சங்கள் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் அம்சங்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இருக்கலாம். சிலருக்குப் பிடித்த புராண நூல்களை வாசிக்கலாம். இணையதளத்தில் கோயில்களைப் பற்றித் தேடிப் படிக்கலாம். சுற்றுலாத் தலங்களைப் பற்றித் தேடிப் படிக்கலாம்.

  கரோனா பற்றிப் படிக்கக் கூடாது என்றில்லை. நேர்மறையாக நம்முள் இன்னும் தைரியத்தை உருவாக்கிக் கொள்ள கரோனா பற்றிய செய்திகளையும் படித்து அறியலாம். நம்மை மீறி நம் மனம் எங்கும் செல்லாது. செல்லவே செல்லாது. நம்மைத் தவிர வேறு யாராலும் நம்மைக் கட்டுப்படுத்த இயலாது. ஆசுவாசப்படுத்த இயலாது. கேளிக்கைப்படுத்த இயலாது.

  புரிந்து கொள்வீர். உற்சாகமாக இருப்பீர். மனம் மிகவும் முக்கியம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai