வடமாநிலங்களிலிருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிப்பு

ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வடமாநிலங்களிலிருந்து வேலூருக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள்


ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வடமாநிலங்களிலிருந்து வேலூருக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். 

வாடகை தர இயலாத நிலையிலுள்ள தங்களிடம் விடுதி உரிமையாளர்கள் வாடகை கேட்டு வற்புறுத்துவதாகவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற பல்வேறு மாவட்ட, மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிற மாவட்ட, மாநிலங்கள், நாடுகளிலிருந்து நோயாளிகளுடன் வரும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள விடுதிகளில் வாடகைக்கு அறைகள் எடுத்துத் தங்குகின்றனர். பின்னர், சிகிச்சை முடிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிச் செல்வது வழக்கம்.

இதன்படி, ஜார்கண்ட், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து வந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்த நிலையிலும் ஊரடங்கு உத்தரவு காரணமாகச் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கையில் போதிய பணம் இல்லாமல் தவிக்கும் அவர்களிடம் விடுதி உரிமையாளர்கள் வாடகைக்குக் கேட்டு வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜி.எஸ்.இக்பால் தலைமையில் பாதிக்கப் பட்டுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு உத்தரவால் சிகிச்சை முடிந்தும் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமலும், கையில் போதிய பணம் இல்லாமல் உணவுக்கும், விடுதி வாடகை கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறோம். அவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவோ அல்லது உணவு, விடுதி வாடகைக்குத் தேவையான நிதியுதவி அளிக்கவோ வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்குப் பதிலளித்த ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், சிகிச்சை முடித்து ஊர்திரும்ப முடியாத பிற மாநிலத்தவர்களுக்கு நிதியுதவி செய்து தர இயலாது. ஆனால், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை விடுதிகளில் வாடகையின்றி தங்கிக் கொள்ளவும், அதுவரை அவர்களுக்கு இலவசமாக உணவு, குடிநீர் வழங்கிடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துதரப்படும் என உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com