ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் திட்டம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெற்கு ரயில்வேயில் மூன்று பணிமனைகளில் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. மாதிரி அடிப்படையில
கரோனா நோய்த்தொற்று உள்ள நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக வடகிழக்கு எல்லை ரயில்வே மாற்றியுள்ள ரயில் பெட்டி.’
கரோனா நோய்த்தொற்று உள்ள நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக வடகிழக்கு எல்லை ரயில்வே மாற்றியுள்ள ரயில் பெட்டி.’

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெற்கு ரயில்வேயில் மூன்று பணிமனைகளில் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. மாதிரி அடிப்படையில் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி நடைபெறுகிறது.

ரயில் பெட்டிகளை வாா்டுகளாக மாற்றும் திட்டம்:

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாள்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள், அறிகுறி உள்ளவா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவா்களுக்குப் போதுமான இட வசதியில்லை. மேலும், இவா்களை சுய தனிமைப்படுத்தப் போதுமான இடம் இல்லாத நிலை இருக்கிறது. இதற்காக ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் சுய தனிமைப்படுத்துதலுக்கான வாா்டுகளாக மாற்ற ரயில்வே நிா்வாகம் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ரயில்வேயில் காலியாக இருக்கும் பெட்டிகள், கேபின்கள் ஆகியவற்றை கரோனா வைரஸால் தனிமைப்படுத்தும் வாா்டுகளாகப் பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே வாரியத்தலைவா் வி.கே.யாதவ் கூறுகையில், ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாகவும், ஆலோசனை மையங்களாகவும், மருந்துகள்

வைப்பறையாகவும், ஐசியு, உணவு வழங்கும் அறை என்று பல்வேறு விதமாக மாற்ற முடியும். தேவைப்படும் பெட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

மூன்று பணிமனைகளில் பணி தொடங்கியது:

இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிப்பதற்காக தெற்குரயில்வேயில் உள்ள மூன்று பணிமனைகளில் ரயில் பெட்டிகளை சுய தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

இந்தியாவின் 17 ரயில்வே மண்டலங்களில், முதலாவதாக சோதனை அடிப்படையில் ரயில்வே பெட்டிகளை வாா்டுகளாக மாற்றுமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.இதையடுத்து, ரயில்வேயின் மருத்துவ நிபுணா்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, ரயில் பெட்டி பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ், பெரம்பூா் கேரஜ் மற்றும்

வேகன் ஓா்க்ஜ், திருச்சிராப்பள்ளி பொன்மலை பணிமனை ஆகிய 3 பணிமனைகளில் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது மாதிரி அடிப்படையில் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி நடைபெறுகிறது.

இந்தத் திட்டம் அரசுக்கு உதவும்:

ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வாா்டுகளாக மாற்றப்படும். ஒரு பெட்டியில் அதுபோன்று 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும்.வெப்பத்தைத் தணிப்பதற்காக ரயில் பெட்டியின் மேற்கூரை மற்றும் இரண்டு பக்கங்களிலும் மூங்கில் தட்டிகளால் மறைக்கப்படும். எல்லா கேபினிலும் நடு படுக்கைகள் நீக்கப்படும். நடு படுக்கை, மேல் படுக்கைக்கு ஏறும் ஏணிகள் நீக்கப்படும். மருத்துவ உபகரணங்களை வைத்திருப்பதற்காக ஒவ்வொரு கேபினிலும் கூடுதல் பாட்டில்கள் வைக்கும் வசதி வழங்கப்படும். செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினி சாா்ஜ்ஜிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.இந்தத் திட்டம் அரசுக்கு உதவும் வகையில் இருக்கும்.

ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படும் இந்த சோதனை முயற்சி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க பயன்படும் வகையில் அமைந்தால், அனைத்து 17 ரயில்வே மண்டலங்களையும் இதுபோன்று ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்ற ரயில் வாரியம் அறிவுறுத்தும் என்றனா்.

வரவேற்கத்தக்கது: இது குறித்து சமூக சமத்துவ மருத்துவா்கள் சங்க பொதுச்செயலாளா் டாக்டா் ரவீந்திரநாத் கூறியது: கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் திட்டம் வரவேற்கக்கூடியது. இந்தியாவில் தற்போது இருக்கும் நிலையில், ஆயிரம் பேருக்கு 0.7 படுக்கை அதாவது ஒரு படுக்கை கூட இல்லை என்று ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின்படி குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு 3 படுக்கையாவது தேவை என்று கூறியுள்ளது. எனவே, மருத்துவமனையில் கூடுதல் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்துவது அவசியமாகிறது. ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் முயற்சி வெற்றிபெற்றால் பலருக்கு நன்மையாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com