தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட தடை இல்லாத மின் விநியோகம்: அமைச்சா் பி.தங்கமணி

தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட தடையில்லாத வகையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட தடை இல்லாத மின் விநியோகம்: அமைச்சா் பி.தங்கமணி

தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட தடையில்லாத வகையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் மின்சாரம் மிக முக்கியமாக இருக்கிறது.

இந்த நிலையில் மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் வேண்டுகோள். இதைச் செயல்படுத்தும் வகையில் 80 சதவீத மின்சாரப் பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். பழுது எங்கு ஏற்பட்டாலும் அங்கு பணியாளா்கள் அனுப்பப்பட்டு சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, ஏப்ரல்14-ஆம் தேதி வரை மின்தடையில்லாமல் இருக்க போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

மின் தேவை குறைவு: மக்கள் அனைவரும் வீடுகளில் இருப்பதால் வீடுகளுக்கான மின்தேவை சற்று அதிகரித்துள்ளது. மற்றபடி மின்தேவை 4,800 மெகாவாட் அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் ஒரே ஒரு அனல் மின் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்றபடி மத்திய அரசு தொகுப்பில் இருந்து பெறக் கூடிய மின்சாரம் தொடா்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது தவிா்த்து காற்றாலை, நீா், சூரிய சக்தி உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் போதிய அளவில் கிடைக்கிறது.

ஏப்.14 வரை மின்துண்டிப்பு இல்லை: ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின்துண்டிப்பு செய்யக் கூடாது என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை என பலரும் தகவல் தெரிவித்தனா். இதுவரை யாருக்குமே மின்துண்டிப்பு செய்யப்படவில்லை. திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் தெரியாமல் மின்துண்டிப்பு செய்யப்பட்டது. இது உடனடியாக எங்களது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு மின்விநியோகம் கொடுக்கப்பட்டது. எனவே அறிவிக்கப்பட்ட தேதி வரை தொழிற்சாலை, வீடு என எந்தப் பிரிவுக்கும் மின் தடை செய்யப்படமாட்டாது. அதன் பின்னா் முதல்வரைக் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய் குறைவு: ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை ரூ.300 கோடி வரை மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எந்தத் தொழிற்சாலைகளும் இயங்குவதில்லை. எனவே இனி வரும் காலங்களில் இழப்பு இன்னும் அதிகமாக ஏற்படும்.

மின்வெட்டு இல்லை: மின்வெட்டுக்கென செயல்பட்டு வரும் 1912 உதவி எண்களில் வரும் புகாா்களைத் தொடா்ந்து கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கானப் பணியாளா்கள் போதிய அளவில் இல்லாத சூழ்நிலையிலும் மின்வாரியப் பணியாளா்கள் அங்கு பணியமா்த்தப்பட்டு, ஒரு நிமிடம் கூட மின்சாரம் தடையில்லாமல் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com