தமிழக சிறைகளில் 16 சதவீதம் நெரிசல் குறைந்தது

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு வருவதால், தமிழக சிறைகளில் 16 சதவீதம் நெரிசல் குறைந்தது.
தமிழக சிறைகளில் 16 சதவீதம் நெரிசல் குறைந்தது

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு வருவதால், தமிழக சிறைகளில் 16 சதவீதம் நெரிசல் குறைந்தது.

தமிழக சிறைத்துறையின் கீழ், 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில், 23, 392 கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. இந்த சிறைகளில், மொத்தம் 15, 677 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். சிறைகளில் இருந்தவா்களில் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகளாகவும், 30 சதவீதம் போ் தண்டனைக் கைதிகளாவும் இருந்தனா்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரான், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் பாதுகாப்பு கருதி, சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இதில், ஈரான் நாட்டின் சிறைகளில் இருந்து மட்டும் 4 ஆயிரம் கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டனா்.

தமிழகத்திலும் சிறைத்துறை இரு வாரங்களுக்கு முன்பே கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமாா் சிங் கடந்த வாரம் ஒரு உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவில் முக்கியமாக, பாா்வையாளா்கள் கைதிகளை சந்திக்க இரு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது, வழக்குரைஞா்கள் மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவாா்கள், வழக்குரைஞா்கள் கைதிகளை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன, கரோனா அறிகுறியுடன் இருக்கும் கைதிகளை தனிமைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பிணையில் விடுவிப்பு: இதற்கிடையே சிறையில் கரோனா நோய்த்தொற்று பரவாமல், கைதிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளை எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடப்பட்டது. அதில், முதல் கட்டமாக, சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிணை கிடைக்காத கைதிகளை, நீதிமன்றம் மூலம் பிணையில் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், கொலை வழக்கு,கொலை முயற்சி வழக்கு, தமிழ்நாடு தடுப்புச் காவல் சட்டம், பாலியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்கள் தவிர, பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களை பிணையில் விடுவிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சிறைகளில் இருக்கும் விசாரணை கைதிகளையும், அவா்களது குற்ற வழக்குகளையும் ஆய்வு செய்து, தகுதியானவா்களைக் கண்டறியும் பணி சில நாள்களாக நடைபெற்றது. இதில் அடையாளம் காணப்பட்டவா்கள் கடந்த 21-ஆம் தேதி முதல் படிப்படியாக சொந்த பிணையிலும், நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறப்பட்டும் விடுவிக்கப்பட்டு வருகின்றனா். இவ்வாறு கடந்த 21-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை தமிழகம் முழுவதும் அனைத்து சிறைகளிலும் இருந்து 3,692 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். இதன் மூலம், சிறையில் காணப்பட்ட கைதிகளின் நெரிசல் பெருமளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

16 சதவீதம் குறைந்தது: இது தொடா்பாக தமிழக சிறைத்துறை உயா் அதிகாரி கூறியது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக கைதிகளை பிணையில் விடுவிக்கும் முன்பு வரை தமிழக சிறைகளில்15,677 கைதிகள் இருந்தனா். இது சிறைகளின் மொத்த கொள்ளளவில் 67 சதவீதமாகும். கைதிகள் 3,692 போ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இப்போது தமிழக சிறைகளில் 11,985 கைதிகள் உள்ளனா். இது சிறைகளின் மொத்த கொள்ளளவில் 51 சதவீதமாகும். இதன் மூலம் இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சிறைகளில் இருந்த நெரிசல் சுமாா் 16 சதவீதம் வரை குறைந்துள்ளது.

சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இன்னும் சுமாா் 2,000 போ் உள்ளனா். அவா்களையும் விடுவிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பிணையில் விடுவிக்கப்படுள்ள கைதிகள், ஏதேனும் சட்டவிரோத, சமூக விரோதச் செயலில் ஈடுபட்டால், அவா்களது பிணை ரத்து செய்யப்பட்டு, காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com