பெரம்பலூரில் வங்கி ஊழியருக்கு கரோனா அறிகுறி: பாரத ஸ்டேட் வங்கிக்கு விடுமுறை

பெரம்பலூர் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று அறிகுறி இ
பெரம்பலூரில் வங்கி ஊழியருக்கு கரோனா அறிகுறி: பாரத ஸ்டேட் வங்கிக்கு விடுமுறை

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று அறிகுறி இருப்பதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவர் பணிபுரிந்து வரும் வங்கிக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து சரக்கு ஏற்றிவந்த லாரி மூலம் அரியலூர் வந்தார். இவரது உறவினர் பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார். உறவினரை அடிக்கடிச் சந்தித்து வந்ததால், அரியலூர் கூலித் தொழிலாளிக்கும், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருந்தாளுநரின் 26 வயது மகள் பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகரில் தங்கி, பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால், அந்தப் பெண்ணை சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு, அவரது சளி மருத்துவப் பரிசோதனைக்காக சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தப் பெண் பணிபுரிந்த வங்கிக்கு மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை அளிக்கப்பட்டு, அந்த வங்கியில் பணிபுரிந்து வரும் 35 நபர்களுக்கு துறைமங்கலத்தில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு, அந்தப் பெண் ஊழியர் சென்று வந்ததால், அங்கு பணியிலிருந்த 8 ஊழியர்களும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மேற்கண்ட இரு வங்கிகளுக்கும் வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com