கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற கட்டட தொழிலாளர்கள்: ஈரோட்டில் தடுத்து நிறுத்தம்

பெருந்துறையில் தங்கியிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் 4 பேர் போதிய உணவு கிடைக்காததால் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர்.
கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்ற கட்டட தொழிலாளர்கள்: ஈரோட்டில் தடுத்து நிறுத்தம்

பெருந்துறையில் தங்கியிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் 4 பேர் போதிய உணவு கிடைக்காததால் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். அவர்களை ஈரோட்டில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உணவு கொடுத்து மீண்டும் வந்த இடத்திற்கே அனுப்பி வைத்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பள்ளகசேரியை சேர்ந்தவர் சரவணன்(53). கட்டட தொழிலாளி. இவரது மகன்கள் கங்கைஅமரன்(20), சாமி(17), வெங்கடேஷ்(15) ஆகியோரும் கட்டட வேலை செய்து வந்தனர். இவர்கள் 4 பேரும் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து அங்கேயே தங்கி கட்டட வேலை செய்து வந்தனர். கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். 

பின்னர் 40 நாட்களாக அங்கேயே தங்கி கட்டட உரிமையாளர் மற்றும் தன்னார்வலர்கள் தரும் உணவையும் சாப்பிட்டு வந்தனர். ஆனால் அந்த உணவும் பற்றாக்குறையாக இருப்பதால் கையில் இருக்கும் பணத்தை வைத்து உணவு பொருள்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து இன்று அதிகாலை நடக்க துவங்கினர். அவர்கள் 20 கி.மீ தூரம் கடந்து ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பிரப் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இவர்களை பார்த்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வரை சென்று, அங்கு கரும்பு லாரியில் ஏறி கள்ளக்குறிச்சிக்கு செல்வதாக கூறினர். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் 4 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களை கள்ளக்குறிச்சி செல்ல அனுமதிக்காமல் மீண்டும் பெருந்துறைக்கே அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கூறியதாவது: கட்டட வேலைக்கு வந்த 4 பேரும் சொந்த ஊருக்கு செல்ல நடந்தே வந்தனர். ஆனால், அவர்களை பிற மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தக்கூடும். இதனால் அவர்கள் மேலும் சிரமப்படுவார்கள். இதை அவர்களுக்கு புரிய வைத்து அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த இடத்திற்கே அனுப்பி வைத்துள்ளோம். அவர்களுக்கு அங்கு தினசரி உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com