கரோனாவில் இருந்து விடுதலை: கடைசித் தேர்வில் ஈரோடு

கரோனா தொற்று இல்லாத நிலை தொடருமானால் மே 13 ஆம் தேதிக்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாற வாய்ப்புள்ளது.
கரோனாவில் இருந்து விடுதலை: கடைசித் தேர்வில் ஈரோடு

கரோனா தொற்று இல்லாத நிலை தொடருமானால் மே 13 ஆம் தேதிக்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாற வாய்ப்புள்ளது.

கரோனா பரவலை தடுத்து முதல் பரிட்சையில் தேர்வு பெற்று சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேற்றமடைந்துள்ள ஈரோடு இறுதி தேர்வான பச்சை மண்டலத்துக்கு முன்னேற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரோனா வைரஸ் பிடியிலிருந்து தமிழகத்திலேயே முதன்முதலாக தன்னை தற்காத்துக் கொண்டது ஈரோடு. இங்கு இந்த வைரஸ் தொற்று பரவிய 70 பேரில் ஒருவர் இறப்பு தவிர மற்ற 69 பேரும் பூரண நலம் பெற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். 

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 28 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருக்கும் நிலையில், ஈரோடு மாவட்டம் கடந்த 30 ஆம் தேதி ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 15 ஆம் தேதிக்குப்பிறகு யாருக்கும் தொற்று இல்லை. இதனால் ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாற வரும் 13ஆம் தேதிக்கு பிறகு வாய்ப்பு உள்ளது. 

அப்போது யாருக்கும் தொற்று இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிப்பது அவசியம். இப்போது வரை ஈரோடு மாவட்டத்தில் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் புதிதாக தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 50 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஓடத்தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதிக்கு பிறகு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது போன்ற நிலை உள்ளது.

ஆனால் மக்கள் நடமாட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. ஈரோடு மாவட்டத்தில் பணி நிமித்தம் வெளியில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பினால், கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 20 முகாம்களில் இதுவரை சுமார் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்கள்,  வெளி மாவட்டங்களில் இருந்து வரும் லாரிகள் மாவட்ட எல்லையில் நிறுத்தப்படுகிறது.

அந்த லாரிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் பொருட்களை இறக்க வேண்டிய இடத்துக்கு எடுத்துச்செல்கின்றனர். சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பிற மாவட்ட மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் ஈரோடு மாவட்டத்துக்கு அவசியமாகிறது. இந்த சூழலில் ஈரோடு மாவட்ட மக்கள் போலீஸாரின் கண்ணை மறைத்து மாவட்டத்தை விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் ஈரோடு மாவட்டத்துக்குள் வரக்கூடாது. 

இதுபோல் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மக்கள் கட்டாயம் முகாம்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றன. மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் உள்ளன. இதில் போலீஸார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் போலீஸ் கையில் சிக்காமல் ஈரோடு மாவட்டத்துக்குள் வந்து விடுகின்றனர். இத்தகைய நபர்கள் குறித்து அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம், காவல், வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் எடுத்துவரும் தீவிர முயற்சிக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com