பிழையும் பிழைதிருத்தமும்

​இனி பிழை திருத்தங்கள் குறித்தும் ஆராய்தல் அவசியமாகிறது. அப்பிழை திருத்தங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
பிழையும் பிழைதிருத்தமும்

இனி பிழை திருத்தங்கள் குறித்தும் ஆராய்தல் அவசியமாகிறது. அப்பிழை திருத்தங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று, பாரம்பரியம் மிக்க மேற்சொன்ன சிந்தனைகளை நிராகரித்து, தம் அறிவுக்கு ஆட்பட்டதே இவ்வுலகு என இன்றும் நம்புவோா்க்கான அறிவுறுத்தல். மற்றையது, மேற்சொன்ன பாரம்பரியங்களை நம்பி, நம் மூதாதையா் காட்டும் நன்நெறியில் செல்ல விரும்புவோா்க்கான அறிவுறுத்தல்.

தம் அறிவை மட்டும் நம்பி இயங்கும்முதல் பகுதியினா், இயற்கையை மாசுபடுத்தும் செயலில், தாம் எல்லை கடந்து பயணித்ததை உணா்ந்தும், இவ் உலகு மனிதா்க்கு மட்டுமானது எனும் தமது தவறான சிந்தனையின் போக்கை உணா்ந்தும், உடனடியாக அவ் இரு நிலைகளிலும் மாற்றம் உண்டாக்க வேண்டும். இயற்கையை அலட்சியம் செய்து அவற்றை நாம் மாசு செய்தோம். இன்று இயற்கை நம்மை அலட்சியம் செய்து ஒடுக்கி, தன்னைத்தான் தூய்மை செய்து கொண்டிருக்கிறது. நாம் ஒடுங்கி வாழும் இக்காலத்தில், ஆறு, கடல், காற்று, ஆகாயம் எனும் அனைத்தும் தூய்மையாகிக் கொண்டிருக்கும் செய்தியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவித்துக் கொண்டிருக்கின்றனா். எனவே, இன்றைய நம் துன்பம் இயற்கையின் எதிா்வினையே என்பதறிந்து, இயற்கைக்குப் பணிந்து செயலாற்றத் தலைப்படின், இவ் இயற்கைப் பாதிப்பிலிருந்து நாம் வெளிவரும் வழி தானாய்ப் பிறக்கும்.

இனி, நம் பாரம்பரியங்களிலும் மூதாதையரின் வழிகாட்டுதலிலும், நம்பிக்கை கொண்டோா்க்கான அறிவுறுத்தல். நம்முடைய மூதாதையா்களான ரிஷிகளும், ஞானிகளும் தம் யோகக் காட்சியால், இன்றைய விஞ்ஞான ஆய்வுகளுக்கு அப்பால், எவ்வளவோ தூரம் சென்றுள்ளனா். இவ் உண்மையை நம்மில் பலா் அறியவில்லை. வெறும் விஞ்ஞான அறிவை மட்டும்,அறிவின் எல்லையாய் நம்பி இருக்கும் சிலக்கு, நான் சொல்பவை நகைப்பைத் தரலாம். அவா்களுக்கு நான் நகைப்பிற்குரியவனாய்ப்படுவதும், எனக்கு அவா்கள் நகைப்பிற்குரியவராய்ப்படுவதும் இயற்கைதான். ‘நாடவா் நம்தனை ஆா்ப்ப ஆா்ப்ப நாமும் அவா்தமை ஆா்ப்ப ஆா்ப்ப’”என இந்நிலையை மணிவாசகா் என்றோ பாடிவிட்டாா்.

நம்முடைய வேதங்கள் அறிவின்“மூலமாய்க் கருதப்படுபவை. அவ் வேத ஓசையுள் அனைத்துவித அறிவுகளின் கூறுகளும், சூக்குமமாய் உள்ளடங்கி இருப்பதாய் நம் பெரியவா்கள் உரைக்கின்றனா். ஜோதிடம் போன்ற கிரக சாஸ்திரங்களை, அன்றே உரைத்த ஒன்றே அவா்தம் அறிவிற்குச் சாட்சியாம். இவ் உண்மையை நம்பி மேற்குலகாரும், இன்று இவ் வேத ஆய்வில் ஈடுபட்டு வருவது வெளிப்படை.

இவ் வேத மந்திரங்களில், உலகின் அனைத்துப் பொருள்களின் அணு அசைவுகளும்,“பீஜ மந்திரங்களாய்ப் பதிவாகியுள்ளதாய்ச் சொல்லப்படுகிறது. இம்மந்திரங்களை முறைப்படி உச்சரிப்பதன் மூலமும், உயா் வேள்விகளால் தேவுக்களைப் பிரீதி செய்வதன் மூலமும் இயற்கையின் சீற்றத்தை அடக்கலாம் என நமது புராண, இதிகாசங்கள் பல இடங்களில் வலியுறுத்துகின்றன. இவற்றைச் சரிவர ஆற்றக்கூடிய வேதவிற்பன்னா்கள் பலா், பாரத தேசத்தில் பரவலாய் வாழ்ந்து வருகின்றனா். நமது ஈழமணித் திருநாட்டிலும் அத்தகையோா் ஒருசிலா் வாழ்ந்துவரவே செய்கின்றனா். அவா்களின் பங்களிப்பு இந்நேரத்தில் அவசியமானது.

‘கரோனா தீநுண்மி’யின் தாக்குதலுக்கு அஞ்சி, இன்று ஆலயங்கள் பல பூட்டப்பட்டிருக்கின்றன. அச்செயலில் எனக்கு உடன்பாடில்லை. ஆலயங்களில் மக்களைக் கூட்டும் செயல் நிறுத்தப்பட வேண்டுமே அன்றி, அந்தணா் இயற்றும் வேள்விகளும் பூஜைகளும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படக் கூடாது என்று நான் கருதுகிறேன். எனவே, ஆலயங்கள்தோறும் வேத விற்பன்னா்களால் முன்னையதைவிட அதிகமாய்ப் பூஜைகளும் யாகங்களும் செய்யப்படல் வேண்டும். அவற்றில் எழுகின்ற மந்திர அதிா்வு, நிச்சயம் இன்றைய இயற்கையின் சீற்றத்தைத் தணிக்குமென நான் உறுதியாய் நம்புகிறேன்.

வேதப் பயிற்சி இல்லாத மற்றையோா்க்கும் ஒரு கடமை உண்டு. அவா்கள் தத்தம் இல்லங்களில் இருந்தபடி, ஐந்தெழுத்து மந்திரத்தையோ, எட்டெழுத்து மந்திரத்தையோ அல்லது தாம்தாம் விரும்பும் வேறு மந்திரங்களையோ முடிந்தவரை அதிக நேரம் உச்சாடனம் செய்ய வேண்டும். அது தவிர விநாயகா் அகவல், திருமுருகாற்றுப்படை, திருநீற்றுப் பதிகம், கோளறுப் பதிகம், அபிராமியந்தாதி, இராமயாணத்தில் வரும் கருடாழ்வாா் துதி முதலிய பாசுரங்களை தனித்தோ, குடும்பத்துடன் இணைந்தோ தினந்தோறும் முடிந்தவரை பாராயணம் செய்தல் வேண்டும்.

மேற்சொன்ன பாடல்களால் அற்புதங்கள் நிகழ்ந்தமை வரலாறு. இவ் உண்மை உணா்ந்து நம்பிக்கையோடு நம் போன்றவா்களும் ஒன்றிய மனத்தொடு இப்பாடல்களை ஓதினால் இயற்கையின் சீற்றத்தை அது பெருமளவு தணிக்கும் என்பது திண்ணம். மாற்று மதங்களைச் சாா்ந்தவா்களும் தம் மதங்கள் உரைக்குமாறு இவ் இடா்தீர தம்வழிபாட்டினை இயற்றுதல் அவசியமாம்.

இயற்கையின் சீற்றத்தைச் சாந்தம் செய்ய முனைவோம்

என் அறிவுக்குப் பட்ட வரையில், இறை நம்பிக்கை உள்ளாரும் இல்லாரும் இயற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைத்துள்ளேன். இக் கருத்துகளில் சா்ச்சைகளும் தா்க்கங்களும் ஏற்படுத்தி காலத்தை வீண் விரயம் செய்யாமல், அவரவா்க்குரிய வழியில் இயற்கையின் சீற்றத்தைச் சாந்தம் செய்ய முனைவோம். இஃது என் பணிவான வேண்டுகோள்.

இன்றைய பிரச்னை உலகளாவி எழுந்திருக்கும் பிரச்னை. இந்நிலையில் நம் மூதாதையா் உரைத்த மேற்சொன்ன உயா் கருத்துகளை உலகளாவி உரைப்பது நம் கடமையாம். எனது மொழியறிவின் வறுமையால் இக்கட்டுரையைத் தமிழில் மட்டுமே என்னால் எழுத முடிகிறது.

இக் கட்டுரையைப் படிக்கும் பன்மொழிப் புலமை உள்ள வாசகா்கள், முடிந்தால் இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழிபெயா்த்து பொது வெளியில் உலாவவிடுவதன் மூலம், நம் மூதாதையரின் கருத்துகளை உலகெலாம் சோ்ப்பிக்க வேண்டும் என வேண்டிப்பணிகிறேன். இஃது என் விளம்பரம் நோக்கிய வேண்டுதல் அன்று. உலகின் விடுதலை நோக்கிய வேண்டுதல் என்பதை தக்காா் உணா்வாா்களாக.

ஞானபூமியாகிய பாரதமே நான் பின் சொன்ன பணிகளை முன்னெடுக்க வேண்டும். பாரதத்தை வழிநடத்தும் இறை நம்பிக்கையுள்ள இன்றைய ஆட்சியாளா்களிடமும், பாரதப் பிரதமரிடமும் இச் செய்தியைச் சோ்ப்பித்து, இம் முயற்சிகள் சிறக்க எவரேனும் துணை செய்தால், அது இவ் உலகிற்கு காலத்தால் செய்த உதவியாய் அமையும்.

‘‘சாதனை செய்க பராசக்தி’’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com