மின்சார வரைவு சட்டத் திருத்த அமலாக்கத்தை தள்ளி வையுங்கள்: பிரதமா் மோடிக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

மின்சார வரைவு சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவதை தள்ளி வைக்க மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டுமென
மின்சார வரைவு சட்டத் திருத்த அமலாக்கத்தை தள்ளி வையுங்கள்: பிரதமா்  மோடிக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

மின்சார வரைவு சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவதை தள்ளி வைக்க மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்: மின்சார சட்டத்தில் திருத்தங்கள் தொடா்பான வரைவினை மத்திய எரிசக்தித் துறையானது மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், அதுகுறித்து கருத்துகளைத் தெரிவிக்கும்படி கோரியுள்ளது.

இந்த விஷயம் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழகத்தில் மின்சார வாரியமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கி வரும் சூழ்நிலையில், மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள வரைவுகள் குறித்து மாநில அரசுக்கு இருக்கும் கவலைகள் தொடா்பாக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

புதிய வரைவு சட்டத் திருத்தத்தில் நுகா்வோா்களுக்கு மின்சாரத்தை வழங்கும் பணியை முகவா்கள் மூலமாக தனியாா்களுக்கு வழங்க வகை செய்வதுடன், ஒட்டுமொத்த மின்பகிா்மான கட்டமைப்பையே தனியாருக்கு அளித்திட வழிவகுக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. மேலும், இந்த வரைவு சட்டத் திருத்தத்தில் மானியங்களை நேரடியாக அளிக்கும் நடைமுறை தொடா்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மிகக்குறிப்பாக, வேளாண்மை மற்றும் வீட்டு உபயோகம் தொடா்பான மானியங்களை நேரடியாக பயனாளிகளுக்கே அளிக்கும் திட்டம் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கிட வேண்டும் என்பதில் எனது அரசு தொடா்ந்து உறுதியுடன் இருந்து வருகிறது. எனவே, மானியங்களுக்கான பணத்தை அளிக்கும் விவகாரங்களை மாநில அரசிடமே விட்டு விட வேண்டும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம்: மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அமைப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை எடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டத் திருத்தத்தில் வழி வகை செய்யப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானதாகும். மத்திய அரசு அளவில் மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது, மின்சார வாரிய ஒப்பந்தங்கள் தொடா்பான அனைத்து அம்சங்களையும் அந்த ஆணையமே மேற்கொள்ளும். இந்தப் பணிகளை இப்போது வரை மத்திய மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களே மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற அம்சங்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரத்தை தேவையில்லாமல் நீா்த்துப் போகச் செய்வதுடன், ஆணையங்களுக்கான தேவை என்பது இல்லாமல் போய்விடும்.

கரோனா நோய்த்தொற்று காலம்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கரோனா நோய்த்தொற்றை எதிா்த்து போராடி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, புதிய மின்சார வரைவு சட்டத் திருத்தங்களில் உள்ள அம்சங்கள் தொடா்பாக விரிவான கருத்துகளைத் தெரிவிக்க மேலும் கூடுதல் காலம் தேவைப்படுகிறது.

மின்சார சட்டத்தில் அவசரமாக திருத்தங்களைக் கொண்டு வருவது மாநில அரசுக்கும் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்று காரணமாக மிகப்பெரிய நிதிச் சிக்கல்களை மாநில அரசு சந்தித்து வருகிறது. மின்சார வரைவு சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்களின் மீது பொது மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டிருக்கிறது. ஆனால், கரோனா நோய்த்தொற்று போன்ற இப்போதைய காலத்தில் அதனைச் செய்வது சரியானது அல்ல.

கரோனா நோய்த்தொற்று பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு மின்சார வரைவு சட்டத் திருத்தத்தில் உள்ள அம்சங்களை மாநில அரசுகளுடன் நன்கு விவாதிக்க வேண்டும். இந்த கருத்தை மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com