தமிழகத்தில் 7,200-ஐ கடந்தது கரோனா பாதிப்பு: சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு நோய்த்தொற்று

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 7,204-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 7,200-ஐ கடந்தது கரோனா பாதிப்பு: சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு நோய்த்தொற்று

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 7,204-ஆக அதிகரித்துள்ளது.

அதில் உச்சமாக சென்னையில் 3,839 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 53 சதவீதத்துக்கும் அதிகமாகும். அதிலும், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 509 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கரோனா பாதித்த பகுதிகள் கண்டறியப்பட்டு அவை தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2.32 லட்சம் பேருக்கு பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 7,204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 669 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 509 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கடலூா், கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூா், திருநெல்வேலி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 135 போ் பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,959-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

364 குழந்தைகள் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 364 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 வயதுக்குட்பட்ட 35 சிறாா்களும், குழந்தைகளும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

மூவா் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் மூவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயது முதியவா் ஒருவரும், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயதுடைய நபரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயது நபா் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com