கூத்தாநல்லூரில் எளியவர்களுக்கு வழங்கி வரும் சஹர் உணவு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில்  ஏழை, எளியவர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 
கூத்தாநல்லூரில் எளியவர்களுக்கு வழங்கி வரும் சஹர் உணவு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில்  ஏழை, எளியவர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, நகர்மன்ற முன்னாள் உறுப்பினரும், பொன்னாச்சி பொதுச் சேவை மையம் பொறுப்பாளருமான எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் கூறியது..

இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதும் ரமலான் மாத நோன்புக் காலத்தில், அதிகாலையில் சஹர் எனப்படும் காலை உணவையும், மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, இஸ்திபாஹ் எனப்படும் மாலை உணவையும் கடைப்பிடிப்பது வழக்கம். எனினும், கூத்தாநல்லூரில் நோன்பு மேற்கொள்பவர்களுக்கு எந்தவொரு சிரமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தினமும் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

சின்ன சிங்கப்பூர் எனச் செல்லப் பெயர் பெற்ற கூத்தாநல்லூரில் பள்ளிவாயில்கள் மற்றும் ஏராளமான செல்வந்தர்கள் மனம் உவந்து பல உதவிகளைச் செய்து வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், செளதி அரேபியா, இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பல கொடையாளர்கள் தாமாகவே முன்வந்து, வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது என்பார்கள், அதுபோல தங்களின் பெயர் வெளியே தெரியாமல், பல்வேறு வகையிலும் உதவிகள் செய்து வருகிறார்கள். 

கூத்தாநல்லூரில் ரமலான் நோன்பில் மாதம் முழுவதும் தினமும் பொன்னாச்சி பொதுச் சேவை மையம் சார்பில், ரமலான் நோன்பு கடைப்பிடிக்கக் கூடிய ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனிமையில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீடு தேடிச் சென்று, சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சஹர் உணவு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் நேரத்தில், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், மாற்றுச் சமுதாயத்தினருக்கும் சஹர் உணவு வழங்கப்படுகிறது. கரோனா தொற்று இடைவெளிக்காக, தினமும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவியுடன், இடைவெளியைக் கடைப்பிடித்தபடி, மாலை 4 மணி முதல் உணவு தயாரிக்கப்பட்டு, இரவு தொடங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரையிலும் உணவுகள் வழங்கப்படுகின்றன என்றார். 

இந்த பொன்னாச்சி சேவை மையம் சார்பில், ரமலான் மாதத்தில் சஹர் உணவு வழங்குவது மட்டுமல்லாமல், சீனாக் கரோனா தொற்று நோயால், அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு, செல்வந்தர்களின் உதவியால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டும், தொடர்ந்து வழங்கியும் வருகிறார்கள். மேலும், சாலையில் அனாதையாகச் சுற்றித் திரிபவர்களுக்கு உணவும், உடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com