புதைசாக்கடை திட்ட கழிவுநீர், வடிகால் வாய்க்காலில் திறந்து விடப்பட்டதால் மக்கள் அச்சம்

சிதம்பரத்தில் புதிய புதைசாக்கடை திட்ட கழிவுநீர், தில்லையம்மன் வடிகால் ஓடையில் திறந்து விடப்பட்டதால்,
புதைசாக்கடை திட்ட கழிவுநீர், வடிகால் வாய்க்காலில் திறந்து விடப்பட்டதால் மக்கள் அச்சம்

சிதம்பரத்தில் புதிய புதைசாக்கடை திட்ட கழிவுநீர், தில்லையம்மன் வடிகால் ஓடையில் திறந்து விடப்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொற்று நோய் மற்றும் மர்மகாய்ச்சால் நோய் ஏற்படும் என்ற அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில் நகரமான சிதம்பரம் நகரம் பல சிறப்புகளுக்கு உரிய நகரமாகும். உலகிலுள்ள பஞ்சபூத சிவ தலங்களில் சிதம்பரமும் ஒன்று. காவிரி பாசன பகுதியில் கடை மடை பாசன படுகையில் ஆன்மீகமான நடராஜர் கோயிலும், கல்வி கழகமான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ள நகரமாகும். நீர் நிலை ஆதாரங்களை எட்டு திசைகளிலும் அறிவியல் பூர்வமாக அமையப்பெற்ற சிதம்பரம் உலகத்தின் மையையமாக  விளங்குவது கூடுதல்  சிறப்பாகும். உள்நாட்டு ஆன்மீக பக்தர்கள் மட்டுமில்லாது உலக நாடுகளின் ஆன்மீக பக்தர்களும் சிவபக்தியோடு உலா வரும் நகரமாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. தேரோடும் வீதிகள் மட்டுமின்றி நகர வீதிகளிலும் கழிவு நீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசி அவ்வப்போது பொதுமக்களையும் சுற்றுலா வாசிகளையும் முகம் சுளிக்கை வைக்கும் சம்பவம் நிகழ்வதுண்டு. 

நான்காம் நிலை நகராட்சியாக நிர்மானிக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில்   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையால் மெட்ராஸ் ராஜதானி கவர்னர் உத்தரவின் பேரில் 25-05-1873 அன்று  மூன்றாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

பிறகு சென்னை மாகான ஊரக வளர்ச்சி மற்றும் நில நிர்வாகத்துறையின் மூலம்  11.04.1949 அன்று இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 09.08.1974 அன்று  முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர்  15.06.1998 முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது . 1952 ஆம் ஆண்டு சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை உறுப்பினர்களாக மரியாதைக்குறிய வாகீசம் பிள்ளை அவர்களும் சுவாமி சகஜாநந்தா ஆகியோர் பணியாற்றிய போது  சிதம்பரம் நகர் மன்ற தலைவராக பணியாற்றிய சுப்புராயப்பிள்ளை பெரும் முயற்சியால் சிதம்பரம் நகரத்தின் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் அடிப்படை தேவைக்காக  பாதாளா சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது.  4.80 சது கீமீ பரப்பளவு கொண்ட சிதம்பர நகராட்சியில் 6016 வீடுகள் 168 கடைகள் அமைந்திருந்தன.  33 வார்டுகள் அமைக்கப்பட்டு வீடுகளில் உபயோகத்திற்கு பிறகு வெளியேற்றப்படும் கழிவு நீரை 39 கி.மீ தூர நீளத்திற்கு திறந்த வெளி கழிவுநீர் சிறிய வகை கால்வாய் மூலமாகவும், 26 கி.மீ தொலைவிற்கு பூமிக்கடியில்  குழாய் பொருத்தும் பணி செய்யப்பட்டது. 

எடத்தெரு, வாகீச நகர் மற்றும் தில்லையம்மன் கோயில் அருகில் ஆகிய மூன்று இடங்களில் கழிவுநீர் சேமிப்பு தொட்டி அமைத்து தில்லையம்மன் கோயில் அருகில் உள்ள கழிவு நீர் தொட்டியிலிருந்து குழாய் மூலம் மின் மோட்டார் உதவியுடன் கழிவு நீரை கொண்டு சென்று மணலூர் அருகில் உள்ள கழிவு நீரை கொண்டு  புல்பண்ணை வளாகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதற்காக 400 மீட்டர் நீளம் 200 மீட்டர் அகலம் கொண்ட  குட்டை வெட்டப்பட்டு கழிவு நீரை சேமித்து வடித்தல் முறையில் நீரை மட்டும் வெளியேற்றி நகர எல்லையில் வீடுகளில் பராமரிக்கப்படும்  மாடுகளுக்கு தேவையான புல்லை வளர்க்க 60 ஏக்கர்  நிலம் நகராட்சியால் வாங்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்ற பாதாள சாக்கடை திட்டம் 1962 ஆம் ஆண்டு நகரமன்றத் தலைவராக இருந்த வி.வி.சாமிநாதன்  முயற்சியால் மக்களின் வரிவருவாய்  மூலம் கிடைக்கபெற்ற நிதியைக்கொண்டு பணியை துரிதப்படுத்தி பாதாள சாக்கடை திட்டம் மக்களின் பயன் பாட்டிற்கு ஓப்படைக்கப்பட்டது. 

ஓவ்வெரு ஆண்டும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் வீடுகள், குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கடைகள் அதிக எணிக்கையில் கட்டப்பட்டு அங்கிருந்து   வெளியேற்றப்படும் கழிவுநீர் அதிக அளவில் சேமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. திட்டம் துவக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் கணகசபை நகர், மற்றும் எடத்தெரு கழிவு  நீரேற்று  நிலையங்கள் நிதி பற்றாக்குறையால் போதிய பராமரிப்பு இல்லாமல்  செயல்படாமல் இருந்தது.
 
அப்போதைய காலகட்டத்தில் சிதம்பர நகராட்சியின் பெரும் பகுதியின் கழிவு நீரும்  சிதம்பரம் இரயில் நிலையம் செல்லும் பாலம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் நேரடியாக கலக்கச் செய்யப்பட்டது. இதனால்  கான்சாகிப் வாய்க்கால் கழிவு நீர் வாய்க்காலாக மாறி சாகுபடிக்கு  சவாலாக மாறியது.  சிதம்பர நகர எல்லைக்கு சுத்தமாக வரும் காவிரி பாசன நீர்,கழிவு நீராக மாறி விவசாயத்தை பாழ்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். 

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்து, பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதின் விளைவாக 2006 ஆம் ஆண்டு புதிதாக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், தமிழகத்தின் துணைமுதல்வராகவும்  பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி அன்று கடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட வளர்ச்சி  ஆய்வுக்கூட்டத்தின் போது சிதம்பரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் அவசியத்தை எடுத்துக்கூறியதால் அக்கூட்ட முடிவில் சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் விரிவு படுத்தப்படும் என அறிவித்தார்.  

அதனை தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து  ரூபாய் 33 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை துவக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதாது என ஓப்பந்ததாரர்கள் யாரும் முன் வராததால் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் ஆய்வு செய்து திட்டமதிப்பீட்டு நிதியை  உயர்த்தி 44 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. 

மேலும் பொதுப்பணித்துறையின் திட்டங்களுக்கான தமிழக அரசின் ஆலோசகர் தலைமையில்  வெள்ளாறு வடிநில வட்ட மேற்பார்வை பொறியாளர், சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட  செயற்பொறியாளர், அணைக்கரை  உதவி செற்பொறியாளர், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர், சிதம்பரம் நகராட்சி பொறியாளர், சிதம்பரம் வட்டாச்சியர், மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர், விவசாய சங்க பிரிதிநிதிகள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு , ஆய்வு குறித்த விவாத கூட்டம் 12.01.2008 அன்று சிதம்பரம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நடைபெற்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அறிக்கையை தமிழக அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் அரசு திட்டப்பணிகளை  மேற்கொள்ள புதிய திட்டமதிப்பீடு தயார் செய்து 57 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்தது.

போதுமான நிதி ஓதுக்கீடு செய்தும் பணி முடிவில் கழிவுநீர் மணலுர் புல்பண்னைக்கு அனுப்பும் நடவடிக்கையே தொடரும் என நகராட்சி நிர்வாகம் கூறியதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் எங்கள் கோரிக்கையின் அடிப்படையில் மணலூரில் திடக்கழிவு, மற்றும் திரவக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிப்பு செய்து பின்னர் கழிவு நீரை வெளியேற்ற  வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். 

தற்போது ஓதுக்கீடு  செய்த நிதி போதாது என்பதாலும்,  சிதம்பரம் நகரத்தில் வசிக்கும்  மக்கள் தொகை கணக்கடுப்பு செய்து அதனடிப்படையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும் என எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் பாதாள சாக்கடை திட்ட செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இனங்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் உள்ளடக்கிய திட்டமதிப்பீடு தாயார் செய்யப்பட்டு ரூ.75.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பணிகள் மேற்கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிதம்பரம் பாதாளா சாக்கடை திட்டம் இன்னும் முழுமை அடையாமல்  உள்ளது. பணி முடியும் தருவாயில் உள்ளது என கூறும் அதிகாரிகள் திட்டம் குறித்த செயல்பாடுகள், ஏற்படும் தாமதம் ஆகிய உண்மைகளை கூற மறுக்கிறார்கள். திட்டம் முடிந்து போதுமக்கள் பயன்பாட்டிற்கு ஓப்படைக்கப்பட்டால் கழிவுநீர் நேரடியாக வாய்க்கால்கலில் கலக்காமல் பாசிமுத்தான் ஓடை மற்றும் கான்சாகிப் பாசன வாய்க்கால்கள் பாதுகாக்கப்படும்  என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளார்கள்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: விவசாயிகளும், பொதுமக்களும் திட்டம் விரைவில் முடியும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக  சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் தில்லையம்மன் கழிவு நீரேற்று நிலையத்தின் மூலம் மணலூருக்கு குழாய் மூலம் அனுப்பு வேண்டிய கழிவு நீரை நீரேற்று நிலைய பின் புறம் உள்ள தில்லையம்மன் ஓடையில் வடிய செய்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை நோய் தொற்று ஏற்படும் வகையில் தூர் நாற்ற வாசத்தோடு வாழும் நிலையை உருவாக்கியுள்ளது.  பொது இடத்தில் கழிவுநீரை திறந்து விடுவதால் தில்லையம்மன் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீர் பூமிக்கடியில் ஊடுறுவி நிலத்தடி நீரை இராசாயன கழிவு நீராக மாற்றி மண்ணின் தன்மையயும் மாற்றிவிடும்.  சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும். கழிவுநீரில் கலந்து உள்ள இரசாயன கலவையால்  உண்டாகும் நச்சு வாயு காற்றுடன் கலந்து பொதுமக்களுக்கு சுவாச பிரச்னையை உருவாக்கும். 

கழிவுநீர் மேலாண்மையை திறம்பட செயல்படுத்த தேவையான திட்டங்களை உருவாக்கி  தேவையான நிதியை ஓதுக்கீடு செய்து பணிகளை துவக்கி இரண்டாண்டுகள் கடந்தும் பொதுமக்கள் அவதிப்படும் வகையில் பொது இடத்தில் கழிவு நீரை திறந்து விடுவது சிதம்பரம் நகராட்சியின் பொறுப்பான செயலா என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு செய்த நாள் முதல் கடந்த 14 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து திட்டத்திற்கு தேவையான 76 கோடி ரூபாய் நிதியை பெற்று பணியை துவக்கி  உரிய காலத்தில் பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துவது,  முறைகேடாக கழிவு நீரை பொது இடத்தில் திறந்து விடுவது போன்ற  நகராட்சி நிர்வாகத்தின் செயல் கண்டிக்கதக்கது. தமிழக அரசு உரிய விசாரனை மேற்கொண்டு சிதம்பரம் நகராட்சி ஆணையர், மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின்  மீது மாசுகட்டுப்பாடு வாரிய சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அரசு தவறு பட்சத்தில் சிதம்பர நகராட்சி ஆணையர், மற்றும் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர்  மீது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்படும் என்கிறார் பி.ரவீந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com