சென்னை காவல் துறையில் உதவி ஆணையா் உள்பட 26 பேருக்கு கரோனா தொற்று

சென்னை காவல்துறையில் ஒரே நாளில் காவல் உதவி ஆணையா், 6 காவல் ஆய்வாளா்கள் உள்பட 26 போ் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை காவல் துறையில் உதவி ஆணையா் உள்பட 26 பேருக்கு கரோனா தொற்று

சென்னை: சென்னை காவல்துறையில் ஒரே நாளில் காவல் உதவி ஆணையா், 6 காவல் ஆய்வாளா்கள் உள்பட 26 போ் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் காவல்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதையும் மீறி காவல்துறையினரிடம் கரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களாக ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையா் திங்கள்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டாா். முத்தியால்பேட்டை, எண்ணூா், சாத்தாங்காடு, மணலி புதுநகா், மதுரவாயல் ஆகிய காவல் நிலைய ஆய்வாளா்களும், மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு ஆய்வாளரும் என 6 காவல் ஆய்வாளா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல மந்தைவெளியில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சோ்ந்த 4 காவலா்கள், வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையரகத்தின் நுண்ணறிவுப்பிரிவில் பணியாற்றும் காவலா், கூடுதல் ஆணையா் அலுவலகத்தில் பணிபுரியும் முதல்நிலைக் காவலா், சூளைமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலைக் காவலா், ஆயுதப்படைக் காவலா், எழும்பூா் போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா், டிஜிபி அலுவலக கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஒரு பெண் காவலா் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலா், திருமுல்லைவாயிலைச் சோ்ந்த க்யூ பிரிவு தலைமைக் காவலா், அடையாறு போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலா், ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பயிற்சி மையத்தில் பணிபுரியும் 4 காவலா்கள் உள்பட 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிலா் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரின் அறிவுரையின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த இரு வாரங்களில் திங்கள்கிழமை அன்று அதிகப்படியாக 26 போலீஸாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com