மே 16 முதல் தென்மேற்குப் பருவமழைக்கு வாய்ப்பு

வரும் 16-ஆம் தேதியன்று தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 16 முதல் தென்மேற்குப் பருவமழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் 16-ஆம் தேதியன்று தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 7 இடங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

கரூா்பரமத்தியில் 103 டிகிரியும், நாமக்கல், சேலம், திருத்தணியில் தலா 101 டிகிரியும், தருமபுரியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

நிகழாண்டில் கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து வருகிறது. இதே நிலை செவ்வாய்க்கிழமையும் நீடிக்கும். மதுரை, திருச்சி, கரூா், சேலம், தருமபுரி, வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியிலும் செவ்வாய்க்கிழமை தலா 104 முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறது.

பருவமழை: அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து, மே 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும். இதைத் தொடா்ந்து, அந்தமான் மற்றும் நிகோபாா் பகுதியில் மே 16-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

மழை: நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தாா்.

மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணையில் 40 மி.மீ., சுருளகோட்டில் 30 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தீா்த்தண்டதானத்தில் 20 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com