முதுநிலை மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பெரும் அநீதி: மு.க.ஸ்டாலின்

"மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்திருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 9,550 இடங்களில் வெறும் 371 மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது பெரும் அநீதி என்று
முதுநிலை மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு பெரும் அநீதி: மு.க.ஸ்டாலின்

"மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்திருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 9,550 இடங்களில் வெறும் 371 மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது பெரும் அநீதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீட்” தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் படுகுழியில் தள்ளி - தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களிலும் சமூகநீதியைத் தட்டிப் பறிக்கும் விதமாக - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் வம்படியாகப் பின்பற்ற மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் இருந்து மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்துள்ள 9550 முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில், இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது வெறும் 371 இடங்கள் மட்டுமே!

ஆனால், சமூகநீதிக் காவலர் மறைந்த வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையின் கீழான 27 சதவீத இடஒதுக்கீட்டின்படி, 2578 இடங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அளிக்கப்பட்ட - 10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு 653 இடங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கினை சுட்டிக்காட்டி, மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த அநீதி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டு வருகிறது.

“நீட் தேர்வு செல்லாது” என்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக ரத்து செய்ய வைத்தது பா.ஜ.க. அரசு. அரசியல் சட்டத்திற்கு எதிராக - சமூகநீதிக் கொள்கைகளுக்கு விரோதமாக, அரசியல் சட்டத்தையே திருத்தம் செய்து, முன்னேறிய சமுதாயத்தினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போக வைத்தது. அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், “ஸ்டே” எதுவும் கிடைத்து விடக்கூடாது என்று இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு கண்ணும் கருத்துமாக இருந்து “முன்னேறிய சமுதாயத்திற்கு” விசுவாசம் நிறைந்த காவலாளியாகச் செயல்படுவது, உள்ளபடியே  வேதனையளிக்கிறது.

“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீடை ஏன் வழங்கவில்லை?” என்று தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்கனவே கேள்வி எழுப்பியும் - பிரதமரும் இப்பிரச்சினையில் ஆர்வம் காட்டவில்லை; 6.1.2020 அன்றே கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. வில்சன் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளித்தும் - உப்புச் சப்பில்லாத பதிலைச் சொல்லி வருகிறார். மருத்துவக் கல்வி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிரான சமூகநீதி மோசடியை அகற்றிட முன்வரவில்லை.

சமூகநீதிக்கு எதிரான குருதி பா.ஜ.க. அரசின் நாடி நரம்புகளில் ஆழமாக ஓடிக் கொண்டிருப்பதால் - மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் கொடுக்கும் மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முன்வராமல் அடம்பிடிக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

அதேநேரத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான மருத்துவப் படிப்பு இடங்களையெல்லாம் முன்னேறிய சமுதாயத்தினருக்கு “அள்ளிக் கொடுக்க” தாராளமாகச்  செயல்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான, ஏறக்குறைய 8000 இடங்களை இந்த மூன்றாண்டுக் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு அநியாயமாகத் தட்டிப் பறித்து விட்டது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடங்களையும் வழங்க மறுக்கிறது. சமூகநீதிக் காவலர் “தங்கத் தட்டில்” வைத்துக் கொடுத்த இடஒதுக்கீட்டை, “நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி” தட்டிப் பறிப்பது இதயமற்ற செயல்!

இந்த இடஒதுக்கீடு அநீதியை நீண்ட நாள் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் பொறுத்துக் கொண்டிருக்காது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்பதோடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள மாநில முதலமைச்சர்களும், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் தற்போது நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, “நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன்” என்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 2019 தேர்தல் பிரச்சாரத்தில் பெருமையாகச் சொல்லிக் கொண்டது உண்மையெனில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நலனில் உள்ளபடியே அக்கறை இருக்குமெனில், மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக  உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மூன்றாண்டு கால அநீதியை அனுமதித்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், முன்னர் இழைத்த தவறுகளை உணர்ந்து, இனிமேலாவது - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றிட வேண்டும் எனவும், சமூகநீதிக்குச் சொந்தமான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மருத்துவ இடங்கள், முன்னேறிய சமுதாயத்திற்குப் போவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்கலாகாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com