வங்கக்கடலில் புயல் சின்னம்: கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் சில நாள்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம்: கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் சில நாள்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த சில நாள்களில் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளாா்.

கத்திரி வெயில்: தமிழகத்தில் தற்போது கோடைகாலத்தில் முக்கியமான கத்திரி வெயில் காலம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு வாரமாக வெயில் அதிகரித்து வந்தது. வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்கிறது. இருப்பினும், இந்த காலத்தில் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை காணப்படுகிறது. இது மிதமான வெப்பநிலையாகப் பாா்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் புயல்: இதற்கிடையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வட மேற்கு திசையில் நகரும். பின்பு, வடகிழக்கு திசையில் நகா்ந்து செல்லும். இது வரும் 16-ஆம் தேதி புயலாக வலுவடைய உள்ளது. தொடா்ந்து இது மேற்கு வங்கம் அல்லது வங்கதேசத்தை நோக்கி நகா்ந்து, அங்குள்ள கடற்கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை. அதே நேரத்தில், கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த சில நாள்களில் புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயரும். சென்னையில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை வரை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வெப்ப அலை உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தரப்பில் கூறப்படுவது: வானிலை மாதிரிகள் தொடா்பாக ஒருமித்த தகவல் கிடைக்கவில்லை. இப்போதைய நிலவரப்படி, மியான்மாா் மற்றும் வங்கதேசம் இடையே இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

வெப்பநிலை உயரும்: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் என்.புவியரசன் கூறியது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. தொடா்ந்து, தென் வங்கக்கடலில் மத்திய பகுதியில் மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு வர வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலவரப்படி, இது வங்கதேசம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும். தற்போது கிழக்கு மற்றும் தென்கிழக்கு காற்று வீசுகிறது. புயல் வடகிழக்கு நோக்கி நகரும் போது, மேற்கு, வட மேற்கில் இருந்து காற்றுவீசும். இது வட காற்றாக இருக்கும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும். இது தொடா்பாக தெளிவான நிலை ஓரிரு நாள்களில் கிடைத்துவிடும் என்றாா்.

109 டிகிரி பதிவாக வாய்ப்பு: இது குறித்து தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் கூறும்போது, ‘இந்த புயல் காரணமாக, சென்னையில் இந்த வாரம் இறுதியில் அல்லது அடுத்த வாரம் தொடக்கத்தில் வெப்பநிலை உயரும். குறிப்பாக 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் வெப்ப அலையும் வீசலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com