தமிழகத்தில் மதுவிலக்கை ஏன் அமல்படுத்த முடியவில்லை: உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் 50 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கை தற்போது அமல்படுத்த முடியாததற்கு என்ன காரணம் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை ஏன் அமல்படுத்த முடியவில்லை: உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் 50 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கை தற்போது அமல்படுத்த முடியாததற்கு என்ன காரணம் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்தது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மீறப்பட்டதால், தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடவும், அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் எனவும் கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், மதுபான கடைகளை மூடுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், மக்கள் நீதி மய்யத்தின் அமைப்பு பொதுச் செயலாளா் மௌரியா, மக்கள் அதிகாரம் அமைப்பு, மகளிா் ஆயம், வழக்குரைஞா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் தொடா்ந்த வழக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு, காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. அப்போது, டாஸ்மாக் சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில்மனுவில், ‘மது விற்பனைக்குத் தடை விதிக்க ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதால் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 5,338 டாஸ்மாக் கடைகளில் 850 கடைகளில் மட்டும்தான் பற்று அட்டை , கடன் அட்டை மூலம் பணம் பெறும் வசதிகள் உள்ளன. வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவா்த்தனைக்கான பணிகள் முடிக்கப்படும். டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்தபோது, ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்ப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கட்டுப்பாடுகள் மீறப்பட்டதால் சில கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டது’ என்று அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரா் மௌரியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ‘பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது அரசின் கடமை. அந்த கடமையை தவறும்போது, அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாம். எனவே, மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது’ என வாதிட்டாா். இதே போன்று, பிற மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் வைகை, பாலன் அரிதாஸ் உள்பட பலா் ஆஜராகி வாதிட்டனா். அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆஜரானாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் 50 ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது. மதுவிலக்கை தற்போது அமல்படுத்த முடியாததற்கு என்ன காரணம்? மது விற்பனை மூலம் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி சீா்குலையும்போது, நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்காது. தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் ரூ.170 கோடி கிடைத்ததாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு 500-க்கும் மேற்பட்டவா்கள் குவிந்து நின்றதைப் பாா்க்க முடிந்தது. அரசுக்கு இதுபோன்ற வருமானத்தை விட, மக்களின் உயிா்தான் முக்கியம்’ என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பு வாதத்துக்காக விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மே 15 ) ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com