சினை மாட்டின் தொண்டையில் சிக்கிய 1.5 கிலோ அரிசியுடன் கூடிய பிளாஸ்டிக் பை அகற்றம்

சினை மாட்டின் தொண்டையில் சிக்கியிருந்த 1.5 அரிசியுடன் கூடிய பிளாஸ்டிக் பையை அறுவை சிகிச்சையின்றி அகற்றி வேலூர் கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். 
சினை மாட்டின் தொண்டையில் சிக்கிய 1.5 கிலோ அரிசியுடன் கூடிய பிளாஸ்டிக் பை அகற்றம்

சினை மாட்டின் தொண்டையில் சிக்கியிருந்த 1.5 அரிசியுடன் கூடிய பிளாஸ்டிக் பையை அறுவை சிகிச்சையின்றி அகற்றி வேலூர் கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்து பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். கால்நடைகளை வளர்த்து வரும் இவரிடம் 3 மாத சினை மாடு ஒன்றும் உள்ளது. கடந்த 2 நாட்களாக வயிறு வீங்கிய நிலையில் மூச்சுத் திணறியபடி அந்த மாடு அவதிப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. இதையடுத்து, வேலூரிலுள்ள கால்நடை பெரு மருத்துவமனைக்கு அந்த மாடு சனிக்கிழமை காலை கொண்டு வரப்பட்டது. அப்போது, அந்த மாட்டின் வாயிலும் நுரை தள்ளியபடி இருந்துள்ளது.

உடனடியாக கால்நடை பராமரித்துறை மண்டல இணை இயக்குநர் ஜே.நவநீதகிருஷ்ணன் தலைமையில் கால்நடை மருத்துவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் அந்த மாட்டுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு பிரத்யேக கருவியினை அதன் வாயிலுள் 2 அடிக்கு விட்டுப் பார்த்துள்ளனர். இதில், மாட்டின் தொண்டைப் பகுதியில் பிளாஸ்டிக் பை சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யாமல் அந்த மாட்டின் வாயிலுள்ள கையைவிட்டு அந்த பிளாஸ்டிக் பை வெளியில் எடுத்தனர்.

அப்போது, சுமார் 1.5 கிலோ அரிசியுடன் முடிச்சுப்போட்ட நிலையில் அந்த பிளாஸ்டிக் பை இருந்துள்ளது. மாடு அரிசியை உண்ணும் ஆர்வத்தில் முடித்துப் போட்ட பையுடன் அதனை விழுங்கியிருப்பது தெரியவந்தது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அந்த மாடு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மருத்துவர் ரவிக்குமார் கூறியது } சினை மாடு மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப் ப்பட்டது. மருத்துவர்கள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை மூலம் அதன் உயிர் காப்பாற்றப்பட்டது. சற்று தாமதித்திருந்தாலும் மாலைக்குள் அந்த மாடு இறந்திருக்கக்கூடும்.

தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதும், நகரில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது தொடர்ந்து கொண்டுள்ளது. அவ்வாறு அரிசி வைத்திருந்த பிளாஸ்டிக் பையை மாடு விழுங்கியதால் இத்தகைய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல், சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் விழுங்கி இறப்பது தொடர் கதையாகி வருகிறது. கால்நடைகளின் பாதுகாப்பைக் கருதி இதுபோன்று பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதையும், அவற்றைச் சாலைகளில் வீசுவதையும் பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com