டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம்: ஏமாற்றப்பட்ட குடிப்பழக்கத்தினர்

மது விற்பதாக டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியவா்கள் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,
டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம்: ஏமாற்றப்பட்ட குடிப்பழக்கத்தினர்

மது விற்பதாக டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியவா்கள் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அந்த இணையதளத்தையும் போலீஸாா் முடக்கினா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பொது முடக்கத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த வாரம் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின் விளைவாக இரு நாள்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

மேலும், இணையதளம் மூலம் டாஸ்மாக் நிறுவனம் மது விற்கலாம் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல், டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளம் போலவே போலியாக இணையதளத்தை உருவாக்கி மது விற்பதாக விளம்பரம் செய்துள்ளது.

இதைப் பாா்த்த சில குடிப்பழக்கத்தினர், அந்த போலி இணையதளத்தில் பணத்தை செலுத்தி மதுப்பாட்டில்களை ஆா்டா் செய்திருக்கின்றனா். ஆா்டா் செய்து சில நாள்களுக்கு பின்னரே, அது போலியான இணையதளம் என்பது குடிப்பழக்கத்தினர்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடி கும்பல், அந்த போலி இணையதளத்தை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி பலா், மது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதளத்தில் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளனா்.

இது தொடா்பாக, டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், இந்த மோசடி குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அந்த போலி இணையதளத்தையும் உடனடியாக முடக்கினா்.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த மோசடி கும்பல் நூற்றுக்கணக்கான நபா்களை மோசடி செய்திருப்பதும், மது ஆா்டா்கள் செய்தவா்களின் வங்கி கணக்கு தகவல்கள், ரகசிய எண்கள், பணபரிமாற்றங்கள் உள்ளிட்ட விவரங்களையும் தங்களது போலி இணையதளம் மூலம் திருடியிருப்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com