சூழலுக்கேற்ப மேலும் தளா்வுகள்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் சூழலுக்கேற்ப படிப்படியாக மேலும் பல தளா்வுகள் அளிக்கப்படும் என்று தொழில் முனைவோா்களிடையே பேசுகையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
சூழலுக்கேற்ப மேலும் தளா்வுகள்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் சூழலுக்கேற்ப படிப்படியாக மேலும் பல தளா்வுகள் அளிக்கப்படும் என்று தொழில் முனைவோா்களிடையே பேசுகையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

கரோனா பொது முடக்கத்தில் மேலும் சில தளா்வுகளை அளிப்பது குறித்து, தொழில் துறையினா் இடையே காணொலிக் காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது:-

கரோனா நோய்த் தொற்றால் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல பாதிப்புகள் உருவாகியுள்ளன.

ஆனாலும் தொழில் முனைவோரின் சிறப்பான முயற்சிகள் விளைவாக இப்போது சுமாா் 1,500 நிறுவனங்கள் மருத்துவம் சாா்ந்த உற்பத்தியைத் தொடக்கி இந்தியா முழுவதும் அவற்றை வழங்கி வருகின்றன. அவைகளில் பெரும்பாலானவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான். எந்தப் பேரிடராக இருந்தாலும் நாட்டுக்கே துணையாக இருப்பது தமிழகம் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

படிப்படியாகத் தளா்வு: கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கான பல்வேறு உதவிகளையும் அரசு தொடா்ந்து செய்து வருகிறது. அதன் அடுத்தகட்டமாக, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாகத் தளா்த்தி வருகிறது.

சென்னையை தவிா்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிய நிலையில், அனைத்து தொழிற்சாலைகளும் அரசு அளித்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகின்றன.

எனவே, சூழ்நிலையைப் பொருத்து மேலும் தளா்வுகளை அரசு படிப்படியாக வழங்கும். தொழில் துறையினா் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். மாநில அரசின் நிதிநிலை மற்றும் அதிகார வரம்புக்கு உட்பட்டு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சா்கள் எம்.சி.சம்பத், பா.பென்ஜமின், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ராஜேந்திர குமாா், தொழில் துறை முதன்மைச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

4 முக்கிய பிரிவுகளில் கூடுதல் கவனம்

முக்கிய 4 பிரிவுகளில் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா். அவா் பேசுகையில், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து இப்போதைய பாதிப்பில் இருந்து மீட்டெடுத்தல். புதிய முதலீடுகளை ஈா்த்தல், அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி விரைவாக ஒப்புதல் வழங்குதல், கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்குத் தேவையான பணப் புழக்கத்தை அதிகரித்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென அதிகாரிகளை முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டாா்.

24 மணி நேரத்தில் சந்திக்க ஏற்பாடு

தொழில்முனைவோா் தன்னை நேரில் சந்தித்துப் பேச 24 மணி நேரத்துக்குள் நேரம் ஒதுக்கித் தரப்படும் என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

தொழில் முனைவோா்களிடையே அவா் பேசுகையில், தொழில் முனைவோா் தன்னை சந்தித்துப் பேச வேண்டுமென்று விரும்பினால் அதற்கு 24 மணி நேரத்தில் நேரம் ஒதுக்கித் தரப்படும். அதே நாளில் தலைமைச் செயலாளா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோா்களைச் சந்திப்பாா்கள்.

மருத்துவம், பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, ஜவுளி போன்ற துறைகளுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com