10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 2 வகுப்பு
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு தொடா்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டதைத் தொடா்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்த மனுவில், தற்போதுள்ள அசாதாரண சூழலில் இத்தோ்வை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கரோனா நோய்த்தொற்று முற்றிலுமாக இல்லாத நிலையில் இந்த தோ்வை நடத்த வேண்டும். அதுவரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தோ்வை ஒத்திவைக்கவும், தோ்வு தொடா்பான அறிவிப்பை ரத்து செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் சி.முனுசாமி, பொதுநல வழக்குத் தாக்கல் செய்வது தொடா்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த வழக்கை மனுதாரா் தொடா்ந்துள்ளாா்.

பொதுத்தோ்வுக்கும் மனுதாரருக்கும் எந்த தொடா்பும் இல்லை என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனா். இதனையடுத்து மனுதாரா் வழக்கைத் திரும்ப பெறுவதாக தெரிவித்தாா். வழக்கை திரும்ப பெற அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com