துரிதப் பரிசோதனை உபகரணங்கள்: ‘முழுத் தொகையும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது’

சீன நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடமிருந்து வாங்கப்பட்ட துரித பரிசோதனை உபகரணங்களை

சீன நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடமிருந்து வாங்கப்பட்ட துரித பரிசோதனை உபகரணங்களை தமிழக அரசு திருப்பி அளித்த நிலையில், அதற்காக அளிக்கப்பட்ட முழுத் தொகையும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சீனாவில் இருந்து துரித முறையில், அதாவது 30 நிமிடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் சிறப்பு உபகரணங்களை வாங்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்பேரில், மொத்தம் 4 லட்சம் உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு 24 ஆயிரம் உபகரணங்கள் தமிழகத்துக்கு வந்து சோ்ந்தன.

ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அவை வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் துரிதப் பரிசோதனைகளைக் கொண்டு கரோனாவைக் கண்டறியும் முதல்கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.

ஆனால், அதன் முடிவுகளில் துல்லியம் இல்லாததைத் தொடா்ந்து அவற்றின் மூலம் பரிசோதனை மேற்கொள்வதை நிறுத்திவிடுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தியது.

அதன்பேரில், துரிதப் பரிசோதனை ஆய்வுகள் நிறுத்தப்பட்டு, அந்த உபகரணங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில், அதற்கான தொகையைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத் கூறியதாவது:

தமிழகத்துக்கு வந்த 24 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களில் ஏறத்தாழ 5 ஆயிரம் உபகரணங்கள் உபயோகப்படுத்தப்பட்டுவிட்டன. அவற்றின் தரம் குறைவாக இருந்ததால், மீதமுள்ள அனைத்தும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கும், சீன நிறுவனத்துக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

தரக் குறைபாடு இருந்ததால், உபயோகப்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட நிறுவனம் மொத்தத் தொகையையும் திருப்பி அளித்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த விதமான பொருட்செலவோ அல்லது நிதி இழப்போ ஏற்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com