விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஐந்து முக்கிய பொருளாதார நிவாரண அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. இது இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவும் என்று நம்புகிறேன்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு, மாவட்ட வாரியாக தொற்று நோய் தடுப்பு மையங்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வகங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அதில் அடங்கும். 

தற்போது ஊரடங்கு காரணமாக அரசு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. கூடுதல் செலவினங்களும் இருப்பதால் பெறப்படும் மாநில அரசின் கடன், மாநிலங்களின் எதிர்கால வரி வருவாயிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

மாநிலங்கள் பெறும் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ள அதே நிலையில், கூடுதல் கடன் தேவைகளுக்கு தேவையற்ற நிபந்தனைகளை இணைப்பது நியாயமற்றது என்றே தோன்றுகிறது. இது மாநில அரசின் அத்தியாவசியத் தேவைகளை பெறுவதில் சிக்கலை உருவாக்கும். எனவே இதுகுறித்து ஒவ்வொரு மாநில அரசுடன் மத்திய அரசு விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

அதேபோன்று நான்கு முக்கிய துறைகளில், மத்திய அரசின் எந்தவொரு நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் தமிழக அரசு ஏற்கனவே சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மின் பகிர்மானத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், மானியம் வழங்குவதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும். 

மத்திய அரசின் அறிவிப்புகளில் இந்த திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். கடுமையான நிதி பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் அத்தியாவசிய செலவினங்களை பூர்த்தி செய்ய மத்திய அரசு உதவும் என்று நம்புகிறேன் 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com