22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவித் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். 
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவி தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவி தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,


சென்னை:  தமிழகத்தில் 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று குழுக்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவர் வழங்கினார். 

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. வேளாண் பொருள்களை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி வணிக ரீதியாக சந்தைப்படுத்தும் பணிகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற்று வருகின்றனர்.

கரோனா பொது முடக்கத்தின் போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்கினர்.

இதுவரை எவ்வளவு: கரோனா நோய்த்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 113 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சுமார் 288 மெட்ரிக் டன் பழ வகைகளையும் 1,670 மெட்ரிக் டன் காய்கறிகளையும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்துள்ளன.

இந்த நிலையில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இடைநிலை மூலதன கடனுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு 22 நிறுவனங்களுக்கு ரூ.2.05 கோடி இடைநிலை உதவியாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிறுவனங்களில் திருவாரூர் கரிகாலன் பல்சஸ், விழுப்புரம் மேல்மலையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஈரோடு கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com