ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல்   திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள்.


சென்னை: குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல்   திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நீர் திறப்பைத் தொடர்ந்து, விவசாயிகள் சிறந்த முறையில் வேளாண் பணிகளை மேற்கொள்ள சிறப்புத் திட்டங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மேட்டூர் அணையைத் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:-

டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது கோரிக்கைகளை ஏற்றும் குறுவை நெல் சாகுபடிக்கென மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும்.

மும்முனை மின்சாரம்: டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லாத மும்முனை மின்சாரம் கிடைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலம் ஏ மற்றும் பி பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் சி மற்றும் டி பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும். பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அனைத்து டெல்டா மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளைத் தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகள் விநியோகிக்க வேண்டும். நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவை இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் ரசாயன உரங்களைப் போதுமான அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிர் உரங்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைத்து விநியோகம் செய்ய வேண்டும்.

கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜூன் 12-ஆம் தேதிக்குள் நாற்று விட்டு, நடவுப் பணிகளை முடிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் தங்களது பகுதி விவசாயிகளுக்கு அறிவுரை அளிக்க வேண்டும். கிணற்று நீர் வசதியில்லாத விவசாயிகள், ஜூன் மாதம் மூன்றாம் வாரத்திலேயே வாய்க்காலில் நீர் வந்தவுடன் நிலத்தை தயார் செய்து, நடவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்கூட்டியே சமுதாய நெல் நாற்றங்கால் அமைப்பதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர நடவு முறையை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை உழவு, பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டியில்லாத கடன்: விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை மேற்கொள்ளத் தேவையான பயிர்க் கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாத கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜூன் 12-இல் திறக்கப்பட்ட ஆண்டுகள்
மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதியன்று இதுவரை 15 முறை திறக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு கடந்த  2008 ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் திறக்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜூன் 12-ஆம் தேதி அணை  திறக்கப்பட்ட ஆண்டு விவரம்: 1934, 1935, 1939, 1965, 1979, 1980, 1984, 1992,1993, 1994, 1997, 2000,  2001, 2006, 2008.

முகக் கவசம் அவசியம்
கரோனா நோய்த்தொற்றைத் தவிர்க்க விவசாயிகள் முகக் கவசம் அணிய வேண்டுமென முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இப்போது நிலவி வரும் 
கரோனா நோய்த்தொற்று காரணமாக விவசாயிகளும், வேளாண் தொழிலாளர்களும் முகக் கவசம் அணிந்து  பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியைப் பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com