கரோனா இல்லாத பச்சை மண்டலமானது திருவாரூர்

கரோனா சிகிச்சையிலிருந்த 3 பேர் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதால் திருவாரூர் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. 
கரோனா இல்லாத பச்சை மண்டலமானது திருவாரூர்

கரோனா சிகிச்சையிலிருந்த 3 பேர் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதால் திருவாரூர் பச்சை மண்டலமாக மாறியுள்ளது. 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து திருவாரூர் மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த வகையில், வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனிடையே, தில்லியில் நடைபெற்ற இஸ்லாமியக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மூலமாக கரோனா பரவி வருவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தில்லி கூட்டத்துக்குச் சென்று, திரும்பி வந்த 16 பேர் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர். மேலும், நீடாமங்கலத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மியான்மாரைச் சேர்ந்த 13 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் வெளியிடப்பட்ட இரத்தமாதிரி முடிவுகளின்படி, மியான்மாரைச் சேர்ந்த ஒருவருக்கும், அவருக்கு உதவியாளராகச் செயல்பட்டவருக்கும் கரோனா தொற்று இருப்பது ஏப்.1 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, தினசரி நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, தில்லி கூட்டத்துக்குச் சென்று வந்தவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் என 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதனிடையே, கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பரவல் தொடங்கியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து வந்தவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. 

கடந்த 11 நாள்களாக திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை. அத்துடன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 32 பேர்களில், 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3 பேர் மட்டுமே  சிகிச்சையில் இருந்தனர். சிகிச்சையில் இருக்கும் 3 பேரும் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதால் திருவாரூர் கரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்த திருவாரூர் தற்போது பச்சை மண்டலமாக மாறி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com