உம்பன் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள உம்பன் புயலால்  பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க  கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உம்பன் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை:  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள உம்பன் புயலால்  பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க  கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல துணைத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: 

ஞாயிற்றுக்கிழமை அதிதீவிர புயலாக இருந்த உம்பன், திங்கள்கிழமை காலை கடும் புயலாகவும், பின்னர் மிகக் கடும் புயலாகவும் (சூப்பர் புயல்) வலுப்பெற்றது. 

இந்தப் புயலானது, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு மற்றும் வட கிழக்குத் திசையில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகள் மிகக் கொந்தளிப்புடன் காணப்படும்.

எனவே மீனவர்கள், செவ்வாய்க்கிழமை (மே 19), மத்திய வங்கக் கடல் பகுதிக்கும், செவ்வாய் (மே 19)மற்றும் புதன்கிழமைகளில் (மே 20) வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது, மணிக்கு 60 கி.மீ. வரை வீசக்கூடும். எனவே செவ்வாய்க்கிழமை, இந்தப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: உம்பன் புயல் காரணமாக, தமிழகத்தின் கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சமாக 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. 

7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம் ஆகிய 
இடங்களில் தலா 101 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com