கரோனாவால் உயிரிழக்கும் முதியவர்கள், நோயாளிகள்: சிகிச்சைகளை மேம்படுத்த சிறப்புக் குழு அமைப்பு

முதியவர்களும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வரும் நிலையில், அவர்களுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழக்கும் முதியவர்கள், நோயாளிகள்: சிகிச்சைகளை மேம்படுத்த சிறப்புக் குழு அமைப்பு



சென்னை: முதியவர்களும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வரும் நிலையில், அவர்களுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவின் சிறப்புக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஏஎம்) தமிழகப் பிரிவு தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரெமா சந்திரமோகன், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விஜயா, திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் மலர்விழி உள்பட பல மருத்துவ நிபுணர்கள் "ஸþம்' காணொலி செயலி மூலம் பங்கேற்றனர். 

முன்னதாக, இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறியதாவது: கரோனா  தொற்றுக்கு உள்ளான அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதேவேளையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, இதயப் பிரச்னைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், நுரையீரல் தொற்று போன்று பிரச்னைகளுடன் வாழ்ந்து வருபவர்களை கரோனா தீநுண்மி தாக்கினால் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அதன் காரணமாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்களும், நாள்பட்ட நோய்களுடன் போராடி வருபவர்களும் கரோனாவுக்கு அதிக அளவில் பலியாகின்றனர். தமிழகத்தில் அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்தகைய நபர்கள்தான்.

எனவே, இனி வரும் காலங்களில் அதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கவும், முதியவர்களும், நோயாளிகளும் கரோனாவில் இருந்து தங்களைத் தற்காத்து கொள்ளவும் பிரத்யேக வழிகாட்டுதல்களை வகுக்கத் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக 35-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசிடம் இதுதொடர்பான விரிவான அறிக்கையை அக்குழு விரைவில் அளிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com