விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 
விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்


சென்னை: விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

இந்தக் கடிதத்தின் விவரம்:    கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பல்வேறு பொருளாதார நிவாரணத் தொகுப்புகளை அறிவித்த தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 

இந்த நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மாவட்ட மருத்துவமனைகளில் தொற்றுநோய்கள் பிரிவுகள் ஏற்படுத்துதல், வட்டார அளவில் பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, வரவேற்கத்தக்க முக்கிய அம்சங்களாகும்.

கூட்டாட்சி தத்துவம்: இது சில பிரிவுகளுக்குப் பயனுள்ளதாக அமைந்திருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில், மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெறும் வரம்பில் தேவையில்லாத கடுமையான நிபந்தனைகளை முன்வைத்திருப்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 
கரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக மிகப் பெரிய வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், கூடுதல் கடன் வாங்கும் வரம்பை மாநில ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி.) 3 சதவீதத்துக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரின.

மாநில அரசுக்கு மிகப் பெரிய அளவிலான செலவுகள் உள்ளன. மாநில அரசுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வரி வருவாயை வைத்து, திரும்ப செலுத்துவதற்கு ஏற்ற கடனை பெற வேண்டியதுள்ளது. அவையெல்லாம் மத்திய அரசிடம் இருந்து வரும் மானியங்கள் அல்ல. 

எனவே கூடுதல் கடன் வாங்கும் தேவைகளுக்காக தேவையில்லாத கட்டுப்பாடுகளை முன்வைப்பது காரணமில்லாததாகவே தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு, ஒரு சீரமைப்புத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்தது அல்ல.

முன்மொழியப்பட்டுள்ள சீரமைப்புத் திட்டங்களை மாநிலங்களிடம் விரிவாக கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நிலைமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 
அந்த சீரமைப்புத் திட்டங்களை கரோனாவுக்கான மத்திய சிறப்பு மானியத்துடன் இணைத்திருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகள் பெறும் கூடுதல் கடனுடன் இணைக்கக் கூடாது. அரசியல் சாசனத்தின் 293(3)-ம் பிரிவுடன் மத்திய அரசின் அதிகாரத்தை இணைத்து, கூடுதல் கடன் வாங்கும் மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது இதுவரை நிகழ்ந்திராத ஒன்று.

கடுமையாக எதிர்க்கிறோம்:  தமிழகத்தைப் பொருத்தவரை, கூடுதல் கடன் பெற்று சீரமைப்புச் செய்யப்பட வேண்டிய 4 பெரிய அம்சங்களில், எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் மாநில அரசே மேற்கொள்கிறது. மின்சார பகிர்வுக்கான சீர்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
மின்சார சட்டத்தில் கொண்டு வர முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ள பிரச்னைகள் பற்றி நான் ஏற்கெனவே கருத்துக் கூறியிருக்கிறேன். விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.  

மானியங்களை தள்ளுபடி செய்யும் முறைகள், மாநில அரசுகளிடமே விடப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடாகும். எனவே, இந்தப் பிரச்னையில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மின்சார பிரிவில் கட்டுப்பாடுகளுடன் கொண்டு வரப்படும் சீர்திருத்தத்தின் தேவைகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
சீரமைப்புத் திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மோசமான நிதிச் சிக்கல் இருக்கும் சூழலில் கடன் பெறுவதற்காக தேவையில்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, முக்கியமான செலவுகளில் தேவைப்படும் நிதியை மாநில அரசினால் பெற முடியாமல் போய்விடும். 

இந்த சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதை நம்புவதோடு, சம்பந்தப்பட்ட வழிகாட்டியில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சகத்தை அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

மத்திய அரசின் நிபந்தனை என்ன?
இலவச மின்சார திட்டத்துக்குப் பதிலாக, அந்தத் திட்டத்துக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

மாநிலங்களுக்கான கடன் வழங்கும் அளவை அதிகரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக இதனை மத்திய அரசு விதித்துள்ளது. இலவச மின்சாரத்துக்குப் பதிலாக அதற்குரிய மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தும் திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதுபோல் "ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்த வேண்டும், மின்சாரத் துறையில்  பல்வேறு சீர்திருத்தங்களை செய்வது உள்ளிட்ட நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய நிதித்துறை அமைச்சகம் (செலவினம்) அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com