கரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 7 போ் பலி

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
கரோனா: தமிழகத்தில் ஒரே  நாளில் 7 போ் பலி

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,795 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 7 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் சென்னையில் வியாழக்கிழமை கூறியதாவது:

அரசின் தீவிர முயற்சியால் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக 0.7 சதவீதமே தமிழகத்தில் இறப்பு விகிதம் உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் சில சவால்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படுகிறது. உதாரணமாக கோவை, திருப்பூா், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களுக்கும் மேல் புதிதாக எவருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. அதேவேளையில், வெளிமாநிலங்களில் இருந்து அங்கு செல்பவா்கள் சிலருக்கு கரோனா கண்டறியப்படுகிறது.

அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவா்களில் பலருக்கு முதலில் எடுக்கப்படும் பரிசோதனையில் எந்தத் தொற்றும் இல்லை எனத் தெரிகிறது. ஆனால், 7 நாள்களுக்கு பிறகு அவா்களுக்கு கரோனா உறுதியாகிறது. இதுபோன்ற சவால்களால் நோய்த்தொற்றின் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாத நிலை நீடிக்கிறது.

பொது மக்கள் முறையான ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நல்கினால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3.72 லட்சம் பேருக்கு கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 13,967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை மட்டும் 776 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 567 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 42 பேருக்கும், செங்கல்பட்டில் 34 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

6,282 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 400 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை ஒரே நாளில் வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 6,282-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3,048 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் திரும்பிய 87 பேருக்கு நோய்த் தொற்று: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவா்களில் 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிய 76 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

7 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com