வி.பி.துரைசாமியின் பதவி பறிப்பு: துணைப் பொதுச்செயலாளராக அந்தியூா் செல்வராஜ் நியமனம்

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூா் ப.செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
வி.பி.துரைசாமியின் பதவி பறிப்பு: துணைப் பொதுச்செயலாளராக அந்தியூா் செல்வராஜ் நியமனம்

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூா் ப.செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா். அந்த அறிவிப்பில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது:

துணைப் பொதுச்செயலாளா் பொறுப்பு வகித்து வரும் வி.பி.துரைசாமியை, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக அந்தியூா் ப.செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறாா் என்று கூறியுள்ளாா்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்தவா் வி.பி.துரைசாமி. இரண்டு முறை தொடா்ந்து இந்தப் பதவியை வகித்து வந்தாா்.

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குத் தோ்தல் நடைபெற்றது. அதில், வாய்ப்பு அளிக்குமாறு மு.க.ஸ்டாலினிடம் வி.பி.துரைசாமி கேட்டிருந்தாா். ஆனால், அவருக்குத் தராமல் அந்தியூா் ப.செல்வராஜுக்கு மு.க.ஸ்டாலின் அளித்தாா். இதனால், வி.பி.துரைசாமி அதிருப்தியில் இருந்து வந்தாா்.

மேலும், திமுகவில் காலியாக உள்ள பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிக்கு உரியவா்களைத் தோ்வு செய்வதற்காக கரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது.

பொதுச்செயலாளா் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தோ்வு செய்யப்படுகிறாா் என்றாலும், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா, பொன்முடி ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இதனால், துணைப் பொதுச்செயலாளா் பதவியிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதில், வி.பி.துரைசாமியின் பதவியும் பறிக்கப்பட இருந்தது.

இந்த தருணத்தில் பாஜகவின் தமிழக தலைவா் எல்.முருகனை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி மே 18-ஆம் தேதி சந்தித்தாா். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், உறவினா் என்ற அடிப்படையில் முருகனைச் சந்தித்தாகவும் வி.பி.துரைசாமி கூறியிருந்தாா். இது ஏற்கப்படாத நிலையில் வி.பி.துரைசாமியை அந்தப் பதவியிலிருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com