விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் முடக்கம்: பரிதவிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள்!

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளதால், இந்தத் தொழிலையே நம்பியுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் முடக்கம்: பரிதவிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள்!



தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளதால், இந்தத் தொழிலையே நம்பியுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு நிகழாண்டு ரூ.50 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரமின்றி பரிதவிக்கும் அவர்கள் அரசின் சலுகைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழகத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பாரம்பரிய மண்பாண்ட பொருள்களின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பொதுமக்கள் மத்தியில் மண்பாண்ட பொருள்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனதால், மண்பாண்டத் தொழிலாளர்களில் பலர் காகிதக் கூழ் விநாயகர் சிலைகள், பொம்மைகள் தயாரிப்பு உள்ளிட்ட மாற்றுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, காகிதக் கூழ் விநாயகர் சிலை தயாரிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் அய்யன்கோவில்பட்டு, அரசூர், திண்டிவனம் பகுதிகள், கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  சுமார் 30 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களும், இவர்களைச் சார்ந்து பிற தொழிலாளர்கள்  சுமார் 20 ஆயிரம்  பேரும் ஈடுபட்டுள்ளனர். இத் தொழில் மூலம் பலதரப்பட்ட தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.50 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

விநாயகர் சிலை தயாரிப்பு ஆண்டு முழுவதும் நடைபெற்று வந்தாலும், அவற்றின் விற்பனை ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தியின் போது மட்டும் விறுவிறுப்பாக இருக்கும். 

விநாயகர் சிலைக்கான அச்சு நவம்பர் மாதத் தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டு, அதன் பிறகு காகித மாவு, கிழங்கு மாவு,  காகித அட்டைகள், கல் மாவு, சவுக்கு குச்சிகளை வைத்து ஓரடி முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கான பாகங்களைத் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். அச்சு தயாரிக்க இரு மாதங்கள் வரை ஆகும். ஜனவரிக்குப் பிறகு சிலைகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகள் முடிவடைந்து விற்பனை நடைபெறும். 

அதன் பிறகே, தமிழகப் பகுதிகளுக்குத் தேவையான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபடுவர். விழுப்புரம், கடலூர், புதுவையில் தயாரிக்கப்படும் சிலைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாது கர்நாடகம், கேரளம், ஆந்திரத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நிகழாண்டு சிலை தயாரிப்புப் பணிகளும், தயாரிக்கப்பட்ட சிலைகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வந்த நிலையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா பொது முடக்கத்தால் இத்தொழில் முடங்கிவிட்டதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மை தயாரிப்பாளர் நலச் சங்கத் தலைவர் கே.முருகன், நிர்வாகி விஷ்ணுராஜ்  ஆகியோர் கூறியதாவது: விநாயகர் சிலை, களிமண் பொம்மை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் வேலையிழந்துள்ளனர். விநாயகர் சதுர்த்திக்காக ஓரிரு வார விற்பனையை எதிர் நோக்கி, ஆண்டு முழுவதும் முதலீடு செய்து, கடன் பெற்று உடலுழைப்பால் மட்டுமே சிலை தயாரிப்பில் ஈடுபடுகிறோம். தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனைக்காக வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வதும் தடைபட்டுள்ளது. இதனால் வருவாயை இழந்து தவிக்கிறோம். இத்தொழிலில் எங்களுடன் ஈடுபட்ட தொழிலாளர்களும் வருவாயின்றி தவிப்பதால், தமிழக அரசு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்   நிவாரணம் அளிக்க வேண்டும். 

இத்தொழில் மூலதனத்துக்காக வங்கிகளில் முதலீட்டுக் கடன் பெற்றுள்ள நிலையில், பொது முடக்கத்துக்குப் பிறகு, அந்த வங்கிகள் மூலம் 50 சதவீதம் மீண்டும் கடன் அளிக்க வேண்டும். தொழில் கடனுக்கான தவணை செலுத்துவதற்கு 3 மாதங்கள் அவகாசம் என்பதை ஓராண்டு வரை நீடிக்க வேண்டும். 

பொது முடக்கத்தின்போது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பிற தளர்வுகளைப் போல, சிலைகளை ஏற்றி அனுப்பும் வாகனங்களுக்கும் இந்த மாதத்திலேயே அனுமதியளிக்க வேண்டும். தொழிலே நடைபெறாத நிலையில், கடந்த மாத மின் கட்டணத் தொகையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு முறையல்ல. ஆகவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். கரோனாவால் நிகழாண்டு தொழில் பாதித்துள்ளதால், அரசு நல வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com