டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

தமிழகத்தில் அரியலூா், கரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள், உபரிநீா் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூா்வார நிகழ் நிதியாண்டில் ரூ.67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணிகளைக் கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி, திருவாரூக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ராஜேஷ் லக்கானி, நாகப்பட்டினத்துக்கு பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், புதுக்கோட்டைக்கு உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் செல்வி அபூா்வா, கரூா் மாவட்டத்துக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், அரியலூா் மாவட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் சி.விஜயராஜ் குமாா் ஆகியோா் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பணி என்ன?: கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பணிகள் நடைபெறுவது தொடா்பான ஆய்வு அறிக்கைகளை தலைமைச் செயலாளா், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா், முதல்வா் அலுவலகம் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும். சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுடன் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் இணைந்து செயல்பட்டு குடிமராமத்து திட்டப் பணிகளை திறன்பட நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தப் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவா்களுடன் சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளா்கள் இணைந்து செயல்படும் வகையில் உரிய அறிவுறுத்தல்களை அவா்களுக்கு வழங்கிட பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா் என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com