நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணுக்கு கரோனா

நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நன்னிலம் அரசு மருத்துவமனை.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நன்னிலம் அரசு மருத்துவமனை.

நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கொத்தவாசல் கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி சரஸ்வதி (29). பிரசவத்திற்காக மே 18ஆம் தேதி திங்கள்கிழமை நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றே அறுவைசிகிச்சைக்குப் பின் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

மே 21-ஆம் தேதி வியாழக்கிழமை, குழந்தை பிறந்த சரஸ்வதியை வீட்டிற்கு அனுப்புவதற்காகச் செய்யப்பட்ட பரிசோதனைகளில், கரோனா தொற்றுப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற பரிசோதனை முடிவில் சரஸ்வதிக்குக் கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று இருப்பதை அறிந்த திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர், உடனடியாக சனிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனையிலிருந்து பிரசவமான பெண், பிறந்த குழந்தை, பெண்ணின் தாயார் மற்றும் கணவர் ஆகிய நால்வரையும் திருவாரூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
 
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட  பெண், ஆறு நாட்களாக  சிகிச்சை பெற்று வந்த நன்னிலம் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதேபோல கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் தாயார் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்ததாகத் தெரிகிறது. மேலும் அருகிலுள்ள தேநீர்க் கடை, உணவகங்களுக்கும் சென்று வந்ததாகத் தெரிகிறது. அத்துடன் தினசரி தனது சொந்த கிராமமான கொத்தவாசல் சென்று வந்ததாகக் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே நன்னிலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய அனைத்து அலுவலர்கள் மற்றும் நன்னிலம் கடைத்தெருப் பகுதியில் உள்ள வணிகர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கொத்தவாசல் கிராமப் பொதுமக்கள் அனைவருக்கும் விரைந்து கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து, தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலர் நித்யா, மருத்துவர் லெட்சுமி பிரபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் கொத்தவாசல் கிராமத்தில் முகாமிட்டு நேரடி தொடர்பில் உள்ள 10 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர். மேலும் இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்புச் செய்து வருகின்றனர். கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் மற்றும் நன்னிலம் வட்டாட்சியர், நன்னிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  பிச்சமுத்து,  ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், வருவாய் ஆய்வாளர் சங்கர நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், கரோனாத்  தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் கண்டறியும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com