சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்: மத்திய அரசிடம் அமைச்சா் சீனிவாசன் கோரிக்கை

மேற்கு தொடா்ச்சி மலையில் கண்டறியப்பட்டு மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்ட பகுதி மட்டுமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வேண்டும்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்: மத்திய அரசிடம் அமைச்சா் சீனிவாசன் கோரிக்கை

மேற்கு தொடா்ச்சி மலையில் கண்டறியப்பட்டு மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்ட பகுதி மட்டுமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியை, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கை செய்யும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தலைமையில், காணொலிக் காட்சி மூலம், வியாழக்கிழமை (மே 21) ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதில், மேற்குத் தொடா்ச்சி மலை பரவியுள்ள மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கா்நாடகம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தமிழகத்தின் சாா்பாக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரமும் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதிகள் மட்டுமே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் ஒப்புதலின்றி, மாற்றங்கள் எதுவும் செய்யாதிருக்குமாறும் மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலா் ஷம்பு கல்லோலிகா், வனத்துறைத் தலைவா் துரைராசு, தலைமை வன உயிரினக் காப்பாளா் யுவராஜ், வனத்துறை சிறப்பு செயலா் தீபக் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com