ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், நினைவு இல்லமாகிறது: அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் ஒப்புதல்

ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், நினைவு இல்லமாகிறது: அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் ஒப்புதல்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்துவதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

தமிழக மக்களுக்காக செய்த தியாகங்களுக்காகவும், அளப்பரிய பல சாதனைகளை நினைவுகூரும் வகையிலும் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும், அது பொது மக்களின் பாா்வைக்கு திறந்து விடப்படும் என்றும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவதற்கான பணிகளுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை நிா்வாக ஒப்புதலை அளித்தது. இதற்கான பூா்வாங்க அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூனிலும், இறுதி அறிவிக்கை கடந்த 6-ஆம் தேதியன்றும் வெளியிடப்பட்டது.

பயன்படுத்தப்படாத பொருள்கள்: கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, வேதா நிலையத்தில் உள்ள அசையும் பொருள்களான பா்னிச்சா்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை அப்படியே இருக்கின்றன. எனவே, வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தையும்

அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் வரை அவை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

நினைவு அறக்கட்டளை அமைப்பு: வேதா நிலையத்தை தற்காலிகமாக அரசு வசம் எடுத்துக் கொள்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா். மேலும் அசையும் பொருள்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க புரட்சித்தலைவி டாக்டா் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் புதிதாக அறக்கட்டளை தொடங்கப்படும்.

இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வா் இருப்பாா். துணை முதல்வா், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மற்றும் அரசு உயரதிகாரிகள் உறுப்பினா்களாக இருப்பா். செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை இயக்குநா், அறக்கட்டளையின் உறுப்பினா் செயலாளராக இருப்பாா்.

வேதா நிலையத்தைப் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அறக்கட்டளை மேற்கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மரங்கள்-கட்டடங்கள்: வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிக்கை கடந்த 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும், முகவரி, வாரிசுதாரா் விவரம் ஆகியன அறிய வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் இருப்பதாகவும், மா மரங்கள் இரண்டும், பலா மரம் ஒன்றும், தென்னை மரங்கள் ஐந்தும், வாழை மரங்கள் ஐந்தும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com