ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி

சேலம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று பல்வேறு அரசுப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசு மீது ஸ்டாலின் புகார்களைக் கூறி வருகிறார். 

ஆர்.எஸ். பாரதி இழிவாகப் பேசிய போதே கட்சித் தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். ஆர்.எஸ். பாரதி தரும் புகார்களில் உண்மைத் தன்மையை ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரசின் இ-டெண்டரில் முறைகேடு நடப்பதாக ஆர்.எஸ். பாரதி கூறுவது பொய்.

ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ். பாரதி ஊடக விளம்பரத்துக்காகப் புகார்களை கொடுக்கிறார் என்று முதல்வர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் கேட்ட நிதியில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவர் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

கரோனா தடுப்புப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி என்று முதல்வர் பழனிசாமி தெரவித்தள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com